ஒரு திரைப்படமோ, புத்தகமோ உங்களுக்கு பிடித்திருக்கும். ஆஹா இந்த திரைப்படத்தை பற்றி உலகத்திற்கு ( அந்த நாலு லைக்கு போடும் நபர்கள் தான்) சொல்லி, நம்மையும் நமது கலை, இலக்கிய தேர்வுகளையும் அறிமுகப் படுத்தலாம் என்ற நினைத்திருப்போம். அந்த படத்தை, புத்தகத்தை படித்த சூட்டோடு அந்த சாரம் குறையாமல் எழுதி முடித்து,நிமிர்ந்த பார்த்தால். யாரோ ஒருவர் அதை ஏற்கனவே எழுதி முடித்து, பல கமெண்ட்களை, ஷேர்களை பெற்று கோலோச்சியிருப்பார். அதை விட ஆபத்தான ஒரு விஷயம் இருக்கிறது. அந்த படத்தில் இருக்கும் சிறு தவறுகளை, தவறான சித்தரிப்புகளை ஒருத்தர் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.
யாரையும் தைரியமாக புகழக் கூட முடிவதில்லை. எங்கிருந்தாவது ஒருவர் வந்து, இவர் அன்று என்ன செய்தார் தெரியுமா என சில பல லிங்க்குகளை தள்ளிவிடுவார். அதற்கு பின் என்னடா இது என்று ஆகிவிடும். பேசாமல் யார் என்ன சொன்னாலும் எம்.ஜி.ஆர் தான் எங்க குலசாமி என வாழ்ந்த நம் தாத்தா பாட்டிகளின் வாழ்க்கை இப்போது நிம்மதியாக தோன்றுகிறது.
இன்று ஒருவரை பற்றி நாலு யூடியூப் வீடியோ, நானூறு கட்டுரை படித்த பின் யார் தான் நல்லவன் என்ற கேள்வி மட்டுமே மிச்சமாக இருக்கிறது.
ஷ்ரோடிங்கரின் பூனை ஆய்வை இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு பூனையையும், அதனை கொல்லக்கூடிய ஒரு ஆயுதத்தையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துவிட்டால். அந்த பெட்டியை திறந்து பார்க்கும் வரை, ஒரு விதத்தில் அந்த பூனை உயிரோடும் இல்லை இறக்கவும் இல்லை என்று அவர் சொல்கிறார். குழப்பமாக இருக்கிறது அல்லவா? அப்படி தான் இன்று ஊடகம் நம்மை யோசிக்கவைக்கிறது
அந்த கட்டுரையை படிக்காத வரை ஒருவர் நல்லவர். படித்து யார்மீதும் நம்பிக்கையற்று வாழ்வதா இல்லை தெரியாமல், கண்மூடித்தனமாக ஒரு நீர்குமிழிக்குள் வாழ்வதா? ஒரு காலத்தில் நல்லவர்களாக தெரிந்த எல்லாருமே, சில உண்மைகள் வெளிவரும்போது கெட்டவர்களாக தெரிகிறார்கள். ” you die a hero, or you live long enough to become the villain” என்ற வாசகம் உண்மை தான் போல. யாரையும் மனதார பாராட்டுவதற்கான மனம் கூட இப்போது இருப்பதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிலும் கறை இருக்கத்தான் செய்யும். அது தான் இந்த தரவுகளின் யுகம் நமக்கு அளிக்கும் சாபமும் வரமும்.
Comments