top of page

வெறுப்பை விதைத்தவன்

நாளிதழில் ஒரு விஷயம் வந்தால் தான் உண்மை என நம்பிய காலம் போய், செய்தி தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்கள் தான் நம்பத் தகுந்தவை என்ற காலமும் கடந்து போய். இன்று அவர் அவரின் டிவிட்டரிலேயே செய்திகளை நம்மால் பெற முடிகிறது. நாம் டிவிட்டரில் பார்த்த முடித்த விஷயங்களைத் தான் செய்தி ஊடகங்களில் வெட்டி, ஒட்டி, மெருகேற்றி செய்தியாக வெளியிடுகின்றனர்.

டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வீச்சு அளப்பறியது தான் ஆனால் புரட்சியை ட்வீட்டில், ஃபேஸ்புக் பதிவில் செய்வது அபத்தமாக தெரிகிறது. சாமானியர்களை குறித்து பேசவில்லை. பிரபலங்கள் பலரும் அரசியல் நோக்கி, சமூக மாற்றம் நோக்கி அடி எடுத்து வைக்கும் போது அவர்களது ட்வீட்கள் மட்டுமே அவர்களது சமூக அக்கறையின் அளவுகோலாக எடுத்துக் கொண்டு சிலர் குதூகலிப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. 20-30 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்தவர்களது கொள்கைகள், நிலைபாடுகளையே முழுவதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இதில் ஒரு ஹேஷ்டேக்கை போட்டால் சமூக போராளி எனவும், மற்றொரு ஹேஷ்டேக்கை போட்டால் சமூக விரோதி எனவும் முத்திரை குத்துவது எந்த வகையில் சரியாக இருக்கும் தெரியவில்லை. மக்களை திருப்தி படுத்த பதிவிடப்படும் ட்வீட்களை வைத்து ஒருவரது கருத்தியலை கணிக்கவே முடியாது.

சமூகவலைதளங்கள் பெரும்பாலும் வெறுப்பை விதைக்கும் இடமாகவே இருக்கின்றன. ஒரு ட்வீட்டில் உங்கள் சந்ததியனரையே திட்டி விட்டு செல்கிறார்கள். பெண்ணாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம். நேரில் ஒரு போதும் அதிர்ந்து கூட பேசிடாதவர்கள், சமூக வலைதளங்களில் பேசும் வசைகளை கேட்க கூட முடியாது. மாற்றுக் கருத்தியல் உடையவர்களிடம் கூட அன்பு பாராட்டும் பண்பாடு இங்கு இல்லை. அரசியலிலும் சரி, சமூகவலைதளத்திலும் சரி. உடனே முத்திரை குத்தப்படும், உங்களுக்கு எதிராக வெறுப்பு விதைக்கப்படும். கருத்தை, கருத்தால் மட்டுமே தகர்க்க வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரீகத்தை அடுத்த தலைமுறை தலைவர்களாவது கொண்டு வருவார்கள் என நினைக்கிறேன்.

சொல்லை விட எப்போதும் செயல் வலியது. இதில் மாற்றுக்கருத்தே இல்லை. வலைதளங்களில் பலரது பதிவுகளை படிக்கும் போது இது தான் தோன்றும். உண்மையில் இவர்களுக்கு புரிகிறதா, இல்லை எல்லாரும் செய்கிறார்கள் என பதிவிடுகிறார்களா என. அப்படி கூட்டத்தோடு கோவிந்தாவாக புரட்சி செய்தால் அது சில நாட்களில் நீர்த்து விடும், உங்களது கருத்தியலை கூர்மையாகத் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அது படிப்பதால், உங்கள் சுற்றத்துடன் உரையாடுவதால் மட்டுமே ஏற்படும். ஒரு ட்வீட் செய்து விட்டு, இதை பிடிக்காதவர்கள் எல்லாம் என்னை பிளாக் செய்யுங்கள் என சொல்வதன் மூலம் நிச்சயம் ஏற்படாது.

சமூக வலைதளங்களை அரசியல் கட்சிகள் பகடை காய்களாக பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான நகர்வுகளை செய்யும் வரை, இந்த நிலையில் மாற்றம் வராது. என்று சமூகத்தின் உண்மையான குரலாய், சமூக வலைதளம் செயல்படுகிறதோ அன்று தான் மாற்றம் ஏற்படும்!

Comments


bottom of page