முன் பின் பழக்கம் இல்லாத ஒரு நபரிடம் பேசுவது ஏன் இத்தனை சுலபமானதாக இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? முற்றிலும் தெரியாதவர் இல்லை, பெயரளவில் தெரிந்திருக்கும் ஆனால் பேசியது கிடையாது. திடீரென ஒரு உரையாடல் தொடங்கும். அது இரண்டு மணி நேரத்தில் இந்த உலகையே சுற்றிவரும். இத்தனை சுலபமாக, கோர்வையாக வார்த்தைகள் வந்து விழுமா என்பதை போல, மனதில் எழுப்பிய சுவர்கள் எல்லாம் கரையும். ஒரே வாரத்தில் அவரைப் பற்றி ஒரு முனைவர் பட்டம் பெறுமளவிற்கு தெரிந்திருக்கும். இந்த இனம்புரியாத உணர்வை காதல் என நினைத்துக்கொள்பவர்கள் உண்டு. காதல் இன்னும் சில வளையங்களை தாண்ட வேண்டும். ஆனால் ஒரே நாளில் அறிமுகமாகி, அன்றே அடுத்த 10 வருடத் திட்டம் அளவிற்கு ஒருவரிடம் எந்த தடையுமின்றி பேச முடியும் என்பதே மனித சுபாவத்தின் ஆச்சரியம் தான்!
நம் இரகசியங்களை நெருங்கிய நண்பர்களிடம் சொல்வதை விட அந்நியர்களிடம் சொல்வதே சுலபமாக இருப்பதற்கு காரணம், அதற்கு முன் நம்மைப் பற்றிய பிம்பம் அவரிடம் இல்லை. நாம் இதுவரை செய்த தவறுகளின், முட்டாள்த்தனங்களின் பட்டியல் அவரிடம் கிடையாது. அவருக்கும் அந்த நிகழ்வோ, விஷயமோ அதுவாக மட்டுமே இருக்கிறது. சொல்லிவிட்டு நகர்ந்து சென்றால், நீங்கள் யாரோ அவர் யாரோ. அந்த அந்நியத்தில் ஒரு சவுகரியம் ஊருகிறது.
பொது இடங்களில் சிலர் சத்தம் போட்டு, தன் பிரச்சனைகளை புலம்பிக் கொண்டு இருப்பார்கள். வீட்டில் இதை நூறாவது முறையாக சொல்லியிருப்பார், உனக்கு வேற வேலையே இல்லை என்று அவர் வீட்டில் ஒரு நபர் சொல்லியிருக்க கூடும். நாமும் கூட வீட்டில் ஒருவரது புலம்பல் தாங்காமல் திட்டிவிட்டு வந்து, முகம் தெரியாத ஒருவரின் புலம்பலுக்கு பரிதாபப்பட்டுக் கொண்டிருப்போம். மனிதன் உண்மையில் வினோதன் தான். ஒரு கார் ஒட்டுநரின் காதல் தோல்வி கதையை பொறுமையாக கேட்பவர்கள், நண்பர்கள் காதல் தோல்விக் கதையை கேட்டு எரிச்சலடைவார்கள்.
இதற்கு காரணம் நாம் மனிதநேயமற்றவர்கள் என்ற அர்த்தம் இல்லை, மனிதனுக்கு புதிய, தெரியாத விஷயங்களின் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அதே நபரை தினமும் பார்க்க நேர்ந்தால் தெறித்து ஒடிவிடுவோம். உண்மையில் நாம் பெரிதாக பேசக்கூடிய ஆறுதல் சொல்லக்கூடிய ஆளாக இருக்க மாட்டோம், ஆனால் அப்படி ஒரு முகமூடி அணிந்து யாரோ ஒரு முகம் தெரியாத மனிதரை அவரது கஷ்டத்தில் இருந்து தேற்றிவிடுவது ஒரு விதமான மனநிறைவு தான். எனக்குள் இதற்கான பக்குவமும் இருக்கு என நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் மனித சுபாவத்தின் உச்சம் என்னத் தெரியுமா? அதை வரையறுக்கவே முடியாது என்பது தான். ஆங்கில்த்தில் out of charachter என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு அர்த்தம் நம் சுபாவத்திற்கு மாறான விஷயத்தை செய்கிறோம் என்பது தான். மனிதர்கள் கதாபாத்திரங்கள் இல்லை. ஒரு எழுத்தாளர் கொடுக்கும் குணாதிசயங்களை மட்டுமே சுமந்து வாழ. அவர்கள் அனுபவத்தின் வழியே புதிதான குணங்களை சேர்த்து, தேவையில்லாதவற்றை தூக்கிப்போட்டுவிடுவார்கள். இவர் இப்படி மாறுவார் என நினைக்கவேயில்லை என்று உங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரை கடந்து இருப்பீர்கள்? அவர்கள் எல்லாரும் மனித சுபாவத்தின் வினோதர்கள் தான்.
இந்த வினோதங்களை ஒரு எழுத்தாளனோ, மனோதத்துவ அறிஞரோ சேகரிக்க முயற்சிக்கலாம் ஆனால் என்றுமே முற்றிலும் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்துக் கொண்டால் எழுத்துக்கும், கலைக்கும், இலக்கியத்திற்குமே வேலை இல்லாமல் போய்விடும்.
Comments