குறைகள் நிறைந்த மனிதர்கள் தான் திரையில் எவ்வளவு உயிர்ப்பாக தெரிகிறார்கள். வெயில் திரைப்படம் பார்த்து முடித்த பிறகும் மனதிலிருந்து அகலாத கதாபாத்திரம் முருகேசன். பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தபோதும் அதே தாக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒன்றுமே இல்லாதவனுக்கு வைராக்கியம் மட்டுமே சொத்து. ஏதோ ஒரு நாள் நாமும் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை வைராக்கியம் மட்டுமே தரும். கையில் சல்லி பைசா இருக்காது, வயிறு நிறையப் பசி இருக்கும். அப்போதும் வைராக்கியம் மட்டும் இருந்தால் போதும். அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.
வைராக்கியம் சொத்து என்றால், அதற்கான முதலீடு அவமானம். ஒரு சொல் தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாவினால் சுட்ட வடு என்பது உணர்ந்தால் மட்டுமே புரியும். ஒருவரை அவமானப்படுத்தும் போது அவருக்குள் இருக்கும் ஒரு பகுதி உடைகிறது. அது சிறியதோ பெரியதோ. வார்த்தையை விட்டவர் நெருக்கமோ தொலைவோ. ஆனால் நிச்சயம் உள்ளே ஒன்று உடையும்.
முருகேசனுக்கும் வைராக்கியம் இருந்தது. பணம் சம்பாதித்து, நகைகளை மீட்டு விடு திரும்ப வேண்டுமென்று. இப்படி வைராக்கியத்துடன் வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா, அவர்கள் கடிவாளம் கட்டிய குதிரைகள் போலத் திரிவார்கள். எச்சுக் கையில் காக்கா ஒட்ட மாட்டார்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்களே கரித்துக் கொட்டும்படி நடந்துகொள்வார்கள். பசி நோக்கார், கண்துஞ்சார், கடமையே கண்ணாயினார் என உலகம் இவர்களைச் சொல்வது பாராட்டு இல்லை என்று மட்டும் இவர்களுக்குத் தெரிவதே இல்லை. அது அவர்களுக்குத் தேவையும் இல்லை
முருகேசனுக்கு வைராக்கியம் இருந்தது எனச் சொல்லியிருந்தேன் அல்லவா? இப்படிச் சொல்லியிருக்க வேண்டும். முருகேசனுக்கு வைராக்கியமும்
இருந்தது. அவனுக்கு வேறு சிலவும் இருந்தது.
முருகேசனுக்கு கண்களுக்கும், மனதிற்கும் கடிவாளம் போடத் தெரியவில்லை. அந்த வயதிற்கே உரிய ஆசைகள் இருந்தது. அவன் சிறுக சிறுக குருவி போலச் சேர்த்த பணமும், வட்டமும் அவனை விட்டுச் செல்லப்போவதற்கு இந்த காதல் தான் காரணம் என அவனுக்கு அப்போது தெரியாது. தெரிந்திருந்தாலும், அவன் சரி தான் பார்க்கலாம் என நினைத்திருப்பான். அவன் எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் குதிப்பவன். அப்பாவின் அடிக்குப் பயந்து ஊருக்குச் செல்லாமல், நிரந்தரமற்ற ஒரு எதிர்காலத்தை நோக்கிச் சென்றவன்.
பரமபதத்தில் கடைசிக் கட்டத்திற்கு முன் இருக்கும் பாம்பிடம் கொத்து
வாங்கி முதல் கட்டத்திற்கு வருகிறான். பணத்தையும் , நகையையும்
தொலைத்த முருகேசன் இப்போது இளமையையும், காதலையும் தொலைத்திருக்கிறான். தோல்வி எல்லா வயதிலும் வலிக்கும். ஆனால் 40 வயதில்
சொல்லிக்கொள்ள எதுவுமில்லாமல் நிற்கும் நிலை நம்மில் யாருக்குமே
வந்துவிடவேண்டாம் என முருகேசன் நிச்சயம் நினைத்திருப்பான்.
ஏனென்றால் அவனுக்கு அது வந்தது.
நாம் எந்த வயதில் ஜெயிக்க வேண்டும், எவ்வளவு ஜெயித்தால், ஜெயித்ததாக ஒத்துக்கொள்ளப்படும் என்பதற்கான அளவுகோல் மட்டும் நம் கையில் இல்லை. நமக்கு எல்லாம் கொடுக்கும் இதே உலகம் நம் வெற்றிக்கான அளவுகோல்களை மட்டும் நம்மிடம் இருந்து பிடுங்கிக்கொள்வது ஏன்?
என்ன இருந்தாலும் சொந்த இரத்தம், என்பது 20 வருடம் கழித்து வந்து நின்றால் செல்லாது போல. பசை இழந்த ஸ்டிக்கர் பொட்டுகளை வியர்வையான நெற்றி நிராகரிப்பதைப் போல, முருகேசனுக்கு தன் பிடி நழுவுவது கண்முன்னே தெரிகிறது. கதிர் என்னும் கை எத்தனை முறை தான் எடுத்து, எடுத்து வைக்க முடியும்.
பால்யத்தின் முடிவினை தந்தையின் அவமானம் தந்தது, வாலிபத்தின்
முடிவைக் காதலியின் மரணம் தந்தது. வாழ்க்கையின் முடிவை மட்டும்
தானே தேடிக்கொண்டான். ஒரு பிராயச்சித்தம் போல. அவன்
ஆசைப்பட்டபடி நிம்மதியாய் தன் அம்மாவின் மடியில் உறங்குகிறான்.
அவன் தங்கைகள் அண்ணா என்று அழுவதைக் காது குளிர
கேட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் அடித்த கைகளுக்கும், மறுத்த
உறவுகளுக்கும், சந்தேகித்த தாய்க்கும் மட்டும் நிரந்தர குற்றவுணர்வைப்
பரிசாய் தந்து போகிறான். அவன் எதிர்பார்த்தபடி அவனுக்கு வாழ்க்கையில் நடந்தது ஒன்றே ஒன்று தான். அவனது மரணம்!
ஆனாலும் முருகேசனைப் பிடிக்கிறது. முருகேசன் மனிதன். பீரிட்டு வரும் ஹார்மோனும், கூனிக்குருக வைக்கும் வெட்கமும் உள்ள சாதாரண மனிதன். வைராக்கியத்தால் ஓடும் இயந்திரம் இல்லை.
தோல்வியடைபவர்களை, தடுமாறுபவர்களை நாம் இன்னும் கரிசனத்துடன் நடத்தினால் தான் என்ன என்ற கேள்வியைத் தான் அவன் நமக்கு
விட்டுப் போகிறான். அவனுக்கு வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம். முருகேசன் சொல்வது போல, அந்த ஒரு அவமானம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், அவன் இப்போது உயிரோடாவது இருந்திருப்பான்!
Comments