ஓரு வயது வரை நாய் இருக்கும் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன். பயம். அதற்கு பின் யாரோ வளர்த்த நாய் ஒன்னு எங்கள் வீட்டு படிக்கட்டுலயே கிடக்கும். விரட்டினாலும் போகாது. எங்கப் போனாலும் திரும்பி எங்க வீட்டுப்படியில தான் வந்து படுக்கும். தெருநாய்க்குட்டிகளை எல்லாரும் எடுத்து வளர்ப்பாங்க. சின்னதுல எல்லாம் பார்க்க ஒரே மாதிரித்தான் வெள்ளையா, புசுபுசுனு இருக்கும். ஆனால் அப்புறம் கொஞ்சம் பெருசானதும், தெருநாய் மாதிரி இருக்குனு விட்டுடுவாங்க. அப்படித்தான் யாரோ விட்டுட்டாங்க போல. தெருவிலேயே வளர்ந்த நாய் அப்படி மனுஷங்க கூட பழகாது.அதை தெருநாய்களும் கூட சேர்க்காது.
அது தான் நான் பழகின முதல் நாய். ஜூலினு பேரு வெச்சோம். எங்க போனாலும் personal bodyguard மாதிரி கூடவே வருவா. நாய்களே பிடிக்காதுனு சொல்ற எல்லாரோட வாழ்க்கையிலும் இப்படி ஒரு ஜூலி வரனும்.
A dog’s purpose படத்தில ஒரு வசனம் வரும்.
Humans are complicated, they do things dogs can’t understand. Like, leaving!
அது சரி சில மனிதர்கள், மனிதர்களை பிரிவதற்கே காரணம் சொல்வதில்லை. நாய்களிடமா சொல்லிவிட போகிறார்கள். ஆனால் அப்படி கைவிடப்பட்ட நாய்கள் ஒரு போதும் மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பதில்லை. யாரோ ஒரு நல்ல மனுஷனை எதிர்பார்த்து காத்து இருக்கும். இந்த golden compass படத்தில் எல்லாருடைய உள் உணர்வும் ஒரு விலங்கா கூடவே சுத்தும். அவங்க குணத்துக்கு ஏற்ற மாதிரி விலங்குகள் அமையும். அந்த விலங்குகள் இறக்கும் போது உரிமையாளரும் இறந்து விடுவார். பலருக்கு நாய்கள் உண்மையில் அப்படித்தான். நாய்களும் இறக்கும் போது மனிதர்கள் இறப்பது இல்லை ஆனால் நிச்சயம் மனதில் ஒரு பகுதி சுக்கு நூறா உடைந்திருக்கும்.
கருப்பிக்கும் பரியனுக்கும் இருக்கும் உறவையே எடுத்துக்கொள்ளலாம். அது வெறும் நாய்க்கும் அதன் உரிமையாளருக்குமான உறவி கிடையாது. கருப்பி பரியனின் சரி பாதி, ஜோவை விட கருப்பிக்கு பரியனை தெரியும். கருப்பி இறக்கும் போது புதிய பரியன் பிறக்கிறான். அது கருப்பி அவனுக்கு விட்டு செல்லும் பாடத்தினால் தான்.
நாய்- மனிதன் உறவை வார்த்தைகளில் சொல்லிடவே முடியாது. வீட்டுக்கு நாயை கொண்டு வந்த உன்னை வீட்டுலேயே சேர்க்க மாட்டேன் என சொல்லிவிட்டு, பின்னர் அதற்கு சாப்பாடு பிசைந்து ஊட்டும் பெற்றோர்களும் உண்டு. அந்த கண்ணை உருட்டி உருட்டி, ஈரமான மூக்கை மேல உரசி, இந்த நாய்கள் எப்படியாப்பட்ட கல்நெஞ்சக்காரங்களையும் கரைச்சிடும்!
பார்க்க ரொம்ப ஆக்ரோஷமான நாய் இனங்களான Rottweiler மற்றும் நம் இந்திய வேட்டை நாய்களை கூட அவர்களது உரிமையாளர்கள் கையில் குழந்தையா பார்த்திருக்கேன். ஒரு முறை குலைச்சா, உயிர் மூச்சே நின்னுடும். ஆனா வளர்த்தவங்க அத பச்சப்புள்ள மாதிரி கையில பிடிச்சிருப்பாங்க. வீட்டிலிருக்கும் சின்னக் குழந்தைகளிடம் எப்படி மென்மையாக பழக வேண்டும் என்பது கூட அவைகளுக்கு தெரியும் என ஒரு நாட்டு நாய் இன ஆர்வலர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது தோன்றி மறைந்தாலும். நாள் முழுக்க கட்டிப்போட்டு, ஒடியாடி விளையாடுவதற்கு இடமில்லாத சூழலில் வளர்க்க கூடாது என்பதால் வளர்க்க மாட்டேன். ஆனால் இந்த pataal lok தொடரை பார்த்ததிலிருந்து, சாவித்திரிக்கும் டாலிக்குமான உறவின் அழகை தான் யோசித்தபடி இருக்கிறேன். இதில் நாயின் பெயர் சாவித்திரி, பெண்ணின் பெயர் டாலி. கடும் மனஉளைச்சலில், திருமண உறவே சிதைந்த நிலையில் இருந்து சாவித்திரி எப்படி டாலியை மீட்கிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இது கதையின் ஒரு சிறு பகுதி தான் ஆனால் அதுவே எப்படி கதையின் போக்கையே மாற்றுகிறது என்பது தான் சுவாரசியம்.
ஒருக்கட்டத்தில் டாலியின் கணவர், சாவித்திரியை நீ பாத்துக்க தேவையில்லை. நாம் காப்பகத்தில் சேர்த்துவிடலாம், அங்க நல்லா பாத்துப்பாங்கனு சொல்லுவான். அதற்கு டாலி, நான் அவளுக்கு தேவை என்பதை விட, அவ எனக்கு தேவைனு சொல்லுவாங்க. அது எவ்வளவு உண்மை. பல நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடு இருப்பவர்களுக்கு கூட நாய்கள் துணையாக இருக்கும். ஒரு நண்பன் மாதிரி.Emotional support animals என்று மருத்துவர்களே கூட பரிந்துரைக்கிறார்கள்.
இந்த பெண் நாய்கள் குட்டிப் போட்டவுடன் யாரையும் குட்டிகளுக்கு பக்கத்தில் அனுமதிக்காது. வீட்டில் வளர்த்தாலும், எல்லாரையும் பக்கத்தில் விடாது. ஆனால் யாராவது ஒருவர் அல்லது இருவரை விடும். நாய்களை விரும்புவதும், நாய்கள் விரும்புபவராக இருப்பதும் கூட ஒரு வரம் தான்.
ஒரு நாயின் அன்புக்கு பாத்திரமாக எல்லாரும் ஆகிவிட முடியாது. வெறும் பிஸ்கெட்டில், பெடிகிரியில் அது அன்பை அளவிடுவதும் கிடையாது. தன் மீது உண்மையான அன்பு உள்ளவர்களுக்கு நாய்கள் பிள்ளைகள் போலத்தான். அவர்கள் கருப்பா சிவப்பா, அழுக்கா, அழகா என்றெல்லாம் அவை பார்ப்பதில்லை.
நாய்கள் கண்ணுக்கு பேய் தெரியும் என்பார்கள். ஆனால் என்னளவில், நான் பார்த்தவரை, நாய்களுக்கு நல்லவர்களை ( அதற்கு நல்லவர்கள், பொதுவாக இல்லை) தெரியும். வாசனையா, கேட்கும் திறனா இல்லை உள்ளுணர்வா என்று தெரியவில்லை. பயப்படாமல், உண்மையிலேயே அதன் மீது அன்போடு நெருங்கினால் எந்த நாயும் குலைப்பது இல்லை. சில நேரங்களில் மனிதர்களை விட நாய்களை பிடிப்பதற்கு இது தான் காரணமோ என்னவோ.
நாய்களின் உலகம் ரொம்ப அழகானது. சராசரியாக 10 வருஷம் தான் வாழும், மனிதனின் வாழ்க்கையில் 1/6 தான். அவன் வாழ்க்கையில் அதற்குப் முன்னும் பின்னும் பல நாய்களை பார்க்கலாம், பழகலாம். ஆனால் அந்த நாய்க்கு அவர் தான் உலகம். அப்படி யோசிக்கும் போது தான் புரிகிறது, அது ஏன் இப்படி அன்பை பொழிகிறது என்று. அது ஒரு மனித ஆயுளுக்கான அன்பை, 10 வருடங்களிலேயே, வேகவேகமாக வாலை ஆட்டி, முகமெல்லாம் நக்கி காட்டுகிறது.
Comments