top of page

நினைவோ ஒரு அலமாரி

உங்கள் நினைவுகளை, பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய அலமாரி போல காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். புதிதான விஷயங்களை செய்யும் போது, புதிய மனிதர்களை பார்க்கும்போது அந்த அலமாரிக்குள் அவர்களுக்கு ஒரு தற்காலிக இடம் கொடுக்கப்படும். அடிக்கடி பார்ப்பவர்களுக்கும், செல்லும் இடங்களுக்கும் மட்டுமே ஒரு நிரந்தர இடம் கிடைக்கும். இந்த நினைவுகளை கட்டிவைப்பது உணர்வு. பழகிய ஒரு மனிதரை பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தோஷமும், பிடிக்காத ஒரு நபரை பார்க்கும்போது ஏற்படும் எரிச்சலும் இந்த உணர்வுகளால் தான். ஒரு காலத்தில் அடிக்கடி பார்த்த மனிதரையோ, இடத்தையோ, பொருளையோ பல வருடம் கழித்து பார்க்கும் போது அந்த உணர்வு மேலோங்கும்.

ஒரு குறிப்பிட்ட deodorant-இன் வாசம், எனக்கு எப்போதும் கல்லூரியின் துவக்க நாட்களை ஞாபகப்படுத்தும். அதை பயன்படுத்துவதை நிறுத்தி பல வருடம் ஆகிய பின்பும், இன்று பேருந்திலோ, லிஃப்டிலோ யாராவது அந்த வாசனையோடு வந்தால், முதல் முதலாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த அந்த நாட்கள் தான் ஞாபகத்துக்கு வரும். சில பாடல்களுக்கும், இடங்களுக்கும் கூட இந்த குணம் உண்டு. சில இடங்களுக்கு நுழைந்தவுடன், காலம் பின்னோக்கி சுழல்வதை போல இருக்கும்.

வண்ணதாசனின் கதைகள் படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும். ஒரு பூவின் வாசனை, கால்களை உரசிப்போகும் பூனை என ஒரு குண்டூசி விழுந்தால் கூட அவரது ஞாபக குதிரை கால்களில் சக்கரங்களை கட்டிவிட்டது போல ஓடும். இந்த ஞாபகம் வருதே effect தான், நமக்கு சில நேரங்களில் வாழ்க்கையில் நின்று, மூச்சு வாங்கி, இளைப்பாறுவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது. ஒரு டிராஃபிக் நிறுத்தத்தில், நமக்கு அருகில் நிற்கும் பேருந்தோ லாரியோ, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, நமக்கு இரவலாக தரும் நிழல் போல அந்த ஞாபகம் நமக்கு சில நன்மைகளை தான் செய்கிறது.

அந்த நேரத்தில் உடன் இருந்த மனிதர்கள், பாக்கெட்டில் இருந்த பணம், மனதில் இருந்த ஆசைகள், செல்ல நினைத்த இடங்கள், அன்றைய தோல்வி, அ சின்ன சந்தோஷம், ஆசுவாசம், எதிர்பாராது வந்த புன்னகை, கண்ணீர் துடைத்த கைகள் என ஒரு கலவையான உணர்வுகளை தூண்டிவிடும். நன்றல்லதை அன்றே மறந்துவிட வேண்டும் என வள்ளுவர் சொன்னது, இந்த “ஞாபகம் வருதே” நொடிகளுக்கு மட்டும் பொருந்துவது இல்லை. சில சமயம், நாம் மறக்க விரும்பும் கசடுகளும் கூட நினைவடுக்குகளில் இருந்து மேலெழுந்து வரும். ஒரே இடம், இருவிதமான நினைவுகளையும் கூட தரலாம். சில நினைவுகளை, கசப்பா இனிப்பா என அத்தனை தெளிவாக வகைப்படுத்தவிடவும் முடியாது. இன்றும் அந்த இடத்திற்கு சென்றால், சந்தோஷமும், சோர்வும் சேர்ந்து அடிக்கும். பல வருடங்கள் கழித்து, செல்லும் போதும் கூட, அந்த நினைவு மட்டும், அலமாரிக்குள் அடக்கிவிட முடியாமல் இருக்கும். சிலர் இது போன்ற நினைவுகளை, முடிந்த வரை தூண்டிப்பார்க்காமல், அது சம்பந்தமான இடங்களை, வாசனைகளை தவிர்த்துவிட்டு செல்வார்கள். வேறு சிலர், அந்த கேள்விக்குறியான நினைவுக்கு இந்த முறையாவது அலமாரியில் நிரந்தர இடம் கிடைக்குமா என்று பார்க்க நினைப்பார்கள். நினைவுகளை கையாள்வதில் சரி தவறு இல்லை. அந்த நொடியில், அந்த இடத்தில், உங்களது உள்ளுணர்வை பொருத்தது தான் எதுவுமே. ஆனால் அலமாரிக்குள் ஒரு நினைவை வைப்பது எப்போதுமே பெரும் நிம்மதி தான். இன்று அலமாரிக்குள் வைத்த ஒரு நினைவு தான் இதையும் எழுத வைத்தது.

Comments


bottom of page