சிறு வயதில், ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து முடித்த பிறகு தான் எழுந்துக் கொள்வேன். புத்தகம் அவ்வளவு சுவாரசியமாக இருந்ததா என் கவனம் அத்தனை நேரம் சிதறாமல் இருந்ததா தெரியவில்லை. ஆனால் இன்று அப்படி ஒரு நிகழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நேர்காணல்களில் யாராவது ரொம்ப மெதுவாக பேசினால், வீடியோவின் வேகத்தை அதிகரித்து வைத்துப் பார்க்கும் பழக்கம் திடீரென தொற்றிக்கொண்டுள்ளது. படத்தில் ஏற்படும் தொய்வுகளை ஃபார்வார்ட் பட்டனை அழுத்தி சரிசெய்யும் பழக்கம், திரையரங்குகள் வரை துரத்திக் கொண்டு வருகிறது. முன்பை விட இன்று நாம் பார்க்கும் எல்லா விஷயங்களின் நீளமும் கணிசமாக குறைந்து விட்டது. படங்கள், படங்களில் வரும் பாடல்கள், விளம்பரங்கள் கூட இன்று சுருங்கி விட்டன. இருந்தும் நம் கவனத்தை பிடித்து நிறுத்த முடியவில்லை
ஒரே நேரத்தில் 20 டேப்கள் என் லேப்டாப்பில் திறந்து வைத்திருக்கிறோம். ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டு எதற்காக அங்கே சென்றொம் என்றே குழம்பி நிற்கிறோம். உண்மையில் நம் கவனத்தை எங்கே சென்று தேடுவது என்பது தான் இந்த தலைமுறையின் மிகப் பெரிய கேள்வி.
சராசரி கவன நேரம் 2000 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் 12 நொடிகளாக இருந்தது. இன்று அது வெறும் 8 நொடிகள். ரொம்ப கவனக் குறைவாக இருப்பவர்களை தங்கமீனுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் தங்கமீனின் கவன நேரம் கூட 9 நொடிகள். இன்று நாம் எல்லாரும் தரையில் தங்கமீன்களாகத் தான் உலவிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணம் நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் கருவி தான். லேப்டாப்பை விட கைப்பேசி ரொம்ப ஆபத்து. இண்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முதல் வாட்ஸாப் வரை செயலிகளின் அறிவிப்புகளையும் ( notifications) நிறுத்தி வைப்பதற்கான வழி உண்டு. தேவையே இல்லாமல் எத்தனை முறை ஒரு நாளுக்கு ஃபோனை பார்க்கிறோம் என்பது அப்போது தான் புரியும். ரொம்ப அவசரமாக யாராவது மெசெஜ் செய்தால் என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? அவசரம் என்றால் நிச்சயம் ஃபோன் செய்வார்கள். வாட்ஸாப் போன்ற தகவல் பரிமாறும் செயலிகளை விட உங்கள் கவனத்திற்கு கொடிய வில்லன்கள் இண்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற செயலிகள் தான். அவற்றை வெளிப்படையாக முகப்பிலேயே ( home screen) வைக்காமல், எதாவது ஃபோல்டருக்குள் ஒளித்து வைக்கலாம். முட்டாள்த்தனமாக தோன்றலாம். Out of sight, out of the mind என்பது ஓரளவுக்கு உண்மை தான். இப்படி செய்யும் போது, நிஜமாகவே உங்களுக்கு நேரம் இருக்கும் போது தான் அந்த செயலிகளை பார்க்க தோன்றும்.
கைக்கு அருகில் என்ன இருக்கிறதோ அதைத் தான் அடிக்கடி மனம் தேடும். கண்டிப்பாக வேலையைத் தாண்டி எதையோ பார்க்க வேண்டிய குறுகுறுப்பு இருந்தால். அது ஒரு புத்தகமாகவோ, இணையத்தில் வாசிக்க கூடிய கட்டுரையாகவோ, செய்தியாகவோ இருக்கட்டும். ஒரு நாள் முழுக்க நாம் செய்யும் விஷயங்களின் மீது கவனம் பாய்ச்சினாலே, எங்கெல்லாம் கவனம் சிதறுகிறது என புரிந்து கொள்ள முடியும்.
சுலபமாக சலிப்பு ஏற்படுவதை, நாம் பார்க்கும் விஷயங்கள் மீது மட்டும் பழி சுமத்தாமல், நம் கவனத்தை மீட்டெடுக்க எல்லாரும் முயற்சிக்கலாம். இப்போது தங்கமீன், நாளை ஈ, எறும்பு போல ஆகிவிடக் கூடாது தானே?
Comments