top of page

தேவையில்லா ஆணிகள்

களவும் கற்று மற என சொல்வார்கள். எனக்கு தேவையில்லாத அறிவு என எதையுமே ஒதுக்கக் கூடாது என்பது தான் அதற்கு பொருள். குறிக்கோள் இன்றி, இதனால் என்ன பயன் விளையும் என்று எதிர்பாராமல், ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் எப்போது கடைசியாக படித்தீர்கள்?

எதையாவது படித்துவிட்டால், அதை பயன்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை ஆனால் அது உடனே நடந்துவிட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. சில வீடுகளில் கதை புத்தகம் படிப்பதையே நேர விரயம் என நினைப்பார்கள். ஏனென்றால் அதை வைத்து எந்த பரீட்சையும் எழுதி, அரசு வேலையும் வாங்க முடியாது. பத்தாவது வரை மட்டும் ஒரு மாணவன் வரலாறு, பூகோளம், சமூகவியல் படித்தால் போதும் என நினைப்பவர்கள் தானே நாம். ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுகளில் சமூகவியல், வரலாறு படிக்க வேண்டியத் தேவை இருப்பதால், ஏதோ இன்னும் வரலாறு புத்தகங்கள் விற்றுக் கொண்டிருக்கின்றன இல்லையென்றால் இலக்கியத்திற்கு வந்த நிலை தான் வரலாற்றுக்கும்.

பெரிதாக எந்த குறிக்கோளும் இன்றி, ஒரு புத்தகத்தை எடுத்து படித்து, அதன் கருத்துகளை உள்வாங்கி, மகிழ்தல் என்பது ஒரு பேரனுபவம். அது எல்லாருக்கும் வாய்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வுகள் என எல்லாவற்றிற்கும் கொடுக்கப்படும் பாடத்திட்டம், மிகவும் வரையறுக்கப்பட்டது தான். அதை வாசிப்பிற்கான ஒரு வாசலாக பார்க்கலாமே ஒழிய அது முழு உலகமும் அல்ல.

வரலாறு போன்ற விஷயங்கள் படிக்கும் போது, ஏதோ ஒரு நிகழ்வின் மீது ஆர்வம் மிகுந்து, அந்த ஒரு தலைப்பை இண்டெர்நெட், புத்தகங்கள் என தேடித் தேடி படிக்கலாம். இப்படி படிக்க ஆரம்பிப்பதில் ஒரு ஆபத்து உண்டு, பாடத்திட்டம் எத்தனை சிறியது, அதைத் தாண்டிய வாசிப்பு எத்தனை பெரியது என்று புரிய ஆரம்பித்தால், பாடத்திட்டம் கொஞ்சம் கசக்கும். அன்லிமிடட் சாப்பாடு சாப்பிட்டவனுக்கு, அளவு சாப்பாடு பிடிக்குமா? அப்படி தேர்வையே கைவிட்டவர்களை எனக்குத் தெரியும். இந்த தேர்வுக்கு ஒரு பாடத்திட்டம், இந்தப் பாடத்தில் இருந்து 2 மார்க் தான் வரும் என படிப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

சில சமயம் நாம் படிப்பதெல்லாம் நமக்கே தேவையில்லாத ஆணிகள் போல தோன்றலாம். இந்திய சுதந்திர வரலாற்றை படித்தால் தேர்வில் 4 மார்க் கிடைக்கும், அப்போது தென் இந்திய சுதந்திர வரலாற்றை பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவிற்கு விரிவாக படிக்க மனம் அலையும். ஆனால் அப்போது தான் நீங்கள் உண்மையான வாசிப்பு தாகத்தை உணர்கிறீர்கள். அப்படி ஒரு தாகத்தை உணராமலே பலரும் வாழ்ந்து வீழ்கிறார்கள். எனவே அது உங்களுக்கு வாய்த்திருந்தால் அதை கவனமாக வளர்த்தெடுங்கள், இல்லையென்றால் அதைத் தேடி கண்டெடுங்கள்!

நாம் படிக்கும் ஒரு நாளிதழ் துணுக்கு கூட வீணாய் போகாது. அதை பயன்படுத்துவதற்கான தருணம் வருவதில் தாமதம் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக வரும். அது போக, உங்கள் கருத்தியலை, ஆளுமையை செதுக்குவதில் வாசிப்பிற்கு தான் பெரிய இடம் உண்டு. அதை ஏதோ ஒரு தேர்வு, பாடத்திட்டம் என சுருக்காமல், விரிவாக படிக்கலாம். கண்டதையெல்லாம் நம்பத் தான் கூடாது! கண்டதையெல்லாம் கண்டிப்பாக படிக்கலாம்!

Comments


bottom of page