top of page

திறமைசாலி

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly. Specialization is for insects.”

தனது தனித் திறமையை கண்டுபிடிப்பதையே வாழ்க்கை குறிக்கோல் என நினைப்பது இயல்பு தான். நாம் அதைத் தான் சொல்லி வளர்க்கப்படுகிறோம். உனக்கு என்ன நன்றாக வரும் என கண்டுபிடி, அதை சிறப்பாக செய்து நிபுணத்துவம் பெறும் வரை பயிற்சி செய்.

அந்த திறமையை வைத்து பணமோ, வேலையோ கிடைக்குமா? இல்லையென்றால் அப்படி ஒரு திறமையை கண்டுபிடிக்க முடியும் வரை இதே செயல்முறையை ரிப்பீட் செய்ய சொல்லிவிடுவார்கள்.

இது 90 களுக்கு பிறகு பிறந்த தலைமுறைக்கு அதிகமாக இருக்கும் நெருக்கடி. தனித் திறமையை கண்டுபிடித்தே ஆக வேண்டிய சூழல். ஆனால் இந்த ராபர் ஹெயின்லீன் என்ற மனிதன் இப்படி நிபுணத்துவம் என்பது பூச்சிகளுக்கு தான் என்கிறார். யோசித்து பார்த்தால் உண்மையாகத் தான் இருக்கிறது. மனிதர்கள் வணிகமயப்படுத்த முடியாத திறமைகளை ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது. பார்த்த மாத்திரத்தில், சிலரிடம் குழந்தைகள் பசக் என்று ஒட்டிக் கொள்வார்கள் அது எல்லாருக்கும் வாய்க்காது. அதுவும் ஒரு திறமை தான். அவர்கள் நர்சரி ஆசிரியையாக இருந்தால் தான் அந்த திறமை அங்கீகரிக்கப்படும். இதையெல்லாம் தெரிந்து என்ன பண்ணப் போகிறாய், உன் தொழிலுக்கு, வேலைக்கு சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள் என நானே பலருக்கும் அறிவுரை சொல்லியிருக்கிறேன். ஆனால் உண்மையில், அப்படி திறமைகளை வளர்த்தெடுப்பதில் பாரபட்சம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதோ ஒன்றை கற்க வேண்டிய ஆர்வம் இருந்தால் தாராளமாக படிக்கலாம். உடனே அதை வைத்து பணம் செய்ய முடியுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. அடிக்கடி சொல்வது போல, எந்த அறிவும் வீணாய் போகாது!

அதே போல மனித மூளையும், உடலும் ஒரே ஒரு விஷயத்தை செய்வதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல. போர் செய்யும் கைகளால், குழந்தையையும் தாலாட்டலாம். வயலில் வேலை செய்த கால்கள், நடனமும் ஆடலாம். முன்னுக்கு பின் முரணான திறமைகளை வளர்த்துக் கொண்டு, பார்ப்பவர்களையெல்லாம் முழிக்க வைப்பதில் ஒரு சின்ன சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அதற்காகவே அதையெல்லாம் செய்யலாம்!

Comentários


bottom of page