top of page

சுவர்களற்ற உலகம் வேண்டும்

தரம் அல்லது சமத்துவம். ஏதேனும் ஒன்றினை மட்டுமே அடைய முடியும். எல்லாருக்கும் வாயிலை திறந்து விட்டால், தரம் நிச்சயம் குறையும்.

இப்படி சாதி வாரியான இட ஒதுக்கீடை எதிர்த்து சமூக வலைதளங்களில் மட்டும், ஆயிர கணக்கான கருத்துகளை தினம் தினம் கண்டெடுக்க முடியும்.

ஒரு பெரும் சுவர் இவர்கள் மீதெல்லாம் எப்போதும் விழவே விழாது என்ற தைரியத்தில் தானே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். படித்த, இணையம் பயன்படுத்த தெரிந்தவர்களிடமே இடஒதுக்கீடு குறித்த எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், மற்றவர்களின் நிலை என்ன?

சுவருக்கு கூட சாதி வர்ணம் தீட்டுவீர்களா? இது ஒரு விபத்து தானே என சிலர் பேசுகின்றனர். டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் அகதிகள் நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதற்காக கட்ட நினைத்ததும் ஒரு சுவர் தான். இந்தியாவெங்கும் எத்தனை ஆயிரம் தீண்டாமை சுவர்கள் இருந்தன என்பதை வரலாறு சொல்லும். உயிர் போகும் தருவாயில் கூட உயர்சாதி குடியிருப்புகள் வழியாக செல்ல முடியாத நிலை இருந்ததை உங்கள் அப்பாவின் தலைமுறையிடம் கேட்டுப் பாருங்கள்.

சுவர்கள் ஒரு போதும் வெறும் சுவர்களாக மட்டும் இருப்பது இல்லை. சுவர்களில் தான் உலகின் பெரும் அரசியல் நடக்கிறது. சட்டம் ஒரு புல்டோசர் கொண்டு சுலபமாக இந்தச் சுவரை தரைமட்டம் ஆக்கிவிடும். ஆனால் ஒவ்வொரு முறையும் சுவர் எழுப்பி, பின் இடித்து, பின் இரு பிரிவினரும் அந்த வன்மத்திலேயே உழன்று, மனதிற்குள் சுவர்கள் எழுப்பி வாழ்வதற்கு, பேசாமல் ஒரு சுவரையே கட்டிவிடலாம். சுவர்களற்ற ஒரு சமூகம் நம் அடுத்த தலைமுறைக்காவது வாய்க்குமா தெரியவில்லை.

மெட்ராஸ் படத்தில் வரும் சுவரை அந்த மக்கள் ஒரு அரசியல் அடையாளமாகவே பார்ப்பார்கள். அது உயிர் காவு வாங்கும் என அஞ்சுவார்கள். 2020 நெருங்கும் வேளையிலும் இப்படி காவு வாங்கிய சுவர்களை பற்றி எழுதிக் கொண்டு இருப்பது தான் வருத்தம். ஆனால் வெறும் சிமெண்டும், செங்கலாலும் கட்டப்பட்ட சுவர்களுக்கு யார் வன்மத்தை புகுத்தியது என்று யோசித்தால். சுவர் விழுந்தது விபத்தா, தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் மீது இருக்கும் அலட்சியமா என்று விளங்கி கொள்ளலாம்.

தனக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் நேர்ந்திடக் கூடாது என நினைப்பது தானே மனித இயல்பு. இதில் தீண்டாமை மட்டும் விதிவிலக்கு. உயர் சாதிக்கு இடைநிலை சாதிகள் தீண்டத் தகாதவன், இடைநிலைக்கு, பட்டியல் இனத்தவன் தீண்டத் தகாதவன். பட்டியல் இனத்திலும் மேலிருப்பவனுக்கு, கீழ் இருப்பவன் தீண்டத் தகாதவன். இப்படி சாதியும், தீண்டாமையும் மட்டும் ஒவ்வொரு படி நிலையை கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறது. அடக்கப் பட்டவன் இன்னொரு அடக்கப்பட்டவனுக்கு குரல் கொடுப்பதை விட்டுவிட்டு, தான் அடக்க இன்னொரு குழுவை தேடுவது தான் சாதிய அமைப்பின் விந்தை. தனக்கும் கீழே ஒருத்தன் இருக்கிறான் என்ற எண்ணம் தான் இவர்களெல்லாம் சாதியை இறுகப்பற்றிக் கொள்வதற்கான காரணம்.

சாதி என்னும் சுவர் கொண்டு நாம் இதயங்களை மூடிவிட்டு, சட்டங்களை மட்டும் வலுவாக அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் எத்தனை பாலங்கள் கட்டி, வழிகள் ஏற்படுத்தினாலும் அவர்கள் தொடர்ந்து சுவர்கள் எழுப்பிக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் நாம் தொடர்ந்து பாலம் அமைப்போம். ஒரு நாள் நிச்சயமாக சுவர்கள் வீழும்!

பாரதியார் பராசக்தியிடம் என்னவெல்லாமோ கேட்டார். இன்று இருந்திருந்தால் இதையும் கேட்டிருப்பார். “சுவர்களற்ற உலகம் வேண்டும்”.

Yorumlar


bottom of page