சாரி நான் அரசியல் பேசுவதில்லை என நமட்டு சிரிப்புடம் சொல்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இது வரை எதற்காகவும், நீதிமன்றத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அவர்களது அடிப்படை உரிமை எங்கேயும் மறுக்கப் பட்டிருக்காது. அதுவே ஒரு privilege தான். அந்த privilege அவர்களுக்கு எப்போதும் அரணாய் இருந்திடுமா?
ஏனென்றால் நாம் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், படிக்கும் கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது. அதை கண்டும் காணாமல் செல்வது, அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு சமம் என்பது பலருக்கும் புரிவதே இல்லை. சரி அதற்காக பேசி – எழுதி, நீ என்ன சாதித்துவிட்டாய் என உங்களுக்குத் தோன்றலாம். நியாயமான கேள்வி தான். எழுத்து உண்மையில் எனக்கு ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு தான். அறிவு தான் உண்மையில் மிகப் பெரிய பாரம். சில விஷயங்களை செய்திகளை பார்த்தப் பிறகு, அதையெல்லாம் பார்க்காதது போல கதை, கவிதை என படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்க முடியவில்லை. மேலும் தீர்வுகள் எப்போதும் சட்டத்தின் வாயிலாக மட்டுமே பிறப்பதில்லை. அவை மக்கள் மனதில் உதிக்க வேண்டும். சமூக மனநிலையை மாற்றுவதில், பிற்போக்கான கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் என் எழுத்துக்கு ஒரு 0.01 % பங்கு இருந்தாலும் எனது முயற்சி வெற்றி தான். வெளிநாடுகளுக்கு செல்லுங்கள், பட்டங்கள் பெறுங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைப் பாருங்கள் ஆனால் ஒரு அடிப்படை சமூகப் பார்வையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சமூகப் பார்வை ஒவ்வொன்றாக தெரிய தெரிய விரிவடைந்துக் கொண்டே தான் போகும். ஆனால் அதற்கு ஒரு அடித்தளம் அமையுங்கள். செய்தி தாள்கள் படிப்பது, உங்கள் மாநிலத்தின் வரலாற்றை படிப்பது மூலம் இதை சுலபமாக செய்துவிட முடியும்.
இவர்கள் ஒரு வகை என்றால். இன்னொரு ரகம் தான் பாதி புரட்சியாளர்கள். நானும் ரொம்ப நாள் பாதி புரட்சியாளராக தான் இருந்தேன். பெண்ணியம் என்றதும் பொங்கி எழுவார்கள். பெண் பாதுகாப்பை குறித்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களில் metoo முதல் நிர்பயா வரை எல்லாவற்றையும் காட்டமாக பேசுவார்கள், எழுதுவார்கள். ஆனால் மண்டை மேலிருக்கும் கொண்டையை மறந்துவிடுவது போல சாதி மதம் என்றால் அதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பார்கள். இந்திய அளவில் பெண் சுதந்திதரத்திற்கு பெரிய ஆபத்து இரண்டு விஷயங்கள் தான். சாதியும் அது வேறூன்றி நிற்கும் மதமும் தான். சாலையில் சேறாக இருந்தால், அதற்கு மழைக் காரணம் இல்லை. சாலையில் இருக்கும் குழி தான் காரணம் என அவர்களுக்கு எப்போதும் புரியும் தெரியவில்லை. முற்போக்கிற்கு அளவுகோல் இல்லை. நான் முடிந்த வரை முற்போக்காக இருக்கிறேன் என்பது அர்தமற்றது. முற்போக்காளர் ஆனால் சாதிமதம் குறித்து நான் பேசமாட்டேன் என சொல்வதற்கு பிற்போக்கு கூட்டணியிலேயே இருந்து கொள்ளலாம்.
எந்த ஒரு சமூக பிரச்சனையின் போது நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான். இது என்னை பாதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இதை அப்படியே கடந்து சென்று விடலாமா ? இன்று போராட்டத்தில் நிற்பவர்களும் ஒரு நாள் இப்படி ஒரு போராட்டத்தை கண்டும் காணாமல் சென்றிருக்க கூடும் தானே?
Commentaires