தமாஷா படத்தில் ரன்பீரின் கதாபாத்திரம், சிறு வயதிலிருந்து ஒரு வயதானவரிடம் சென்று காசு கொடுத்து கதை கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் ராமாயணம், மகாபாரதம், ரோமியோ ஜூலியட் என கலந்துகட்டி தினமும் கதை சொல்வார். தன்னையே அந்த கதைகளின் கதாபாத்திரங்களாக நினைத்துக் கொண்டு நடித்து பார்ப்பான். அவர் கதைகளை மாற்றி மாற்றித் தான் சொல்கிறார் என தெரிந்தாலும், அவருடைய கதையை விடாது சென்று கேட்பான். கதையென்றாலே அவர் தான் என வேத் ( ரன்பீர்) மனதில் பதிந்து விடும். வளர்ந்து, வேலையை தொலைத்து, தன் சுயத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பு இல்லாத நிலையில் மீண்டும் அந்த முதியவரைத் தேடி பிடித்து, தன் கதையில் அடுத்து என்னவென்று அவரையே கேட்பான்.
“உன் கதைய ஏன் என்கிட்ட கேக்குற? நீ தான் உன் கதையை சொல்லனும்” என்று அவர் சொல்லிவிடுவார். இது வரை கேட்ட, எழுதப்பட்ட கதைகளை மட்டுமே சொல்லி வந்தவன் அப்போது தான் அவனது கதையை சொல்ல ஆரம்பிப்பான். ஒரு கதை, மனிதனை இப்படியெல்லாம் ஆட்டுவிக்குமா என்று வியப்பாக இருந்தது. ஆனால் கதைக்கு அந்த சக்தி உண்டு. இன்று நமக்கு வாழ்க்கை, நாளை நம்மை பற்றி வேறொருவர் பேசும் போது, அது கதை. அப்படி யோசித்துப் பார்ததால் புரியும். “கதையும் வாழ்வும் வேறு வேறு அல்ல”.
என் தந்தை பாலையா புத்தகத்தை படித்த போது இதே எண்ணம் தான் தோன்றியது. ஒரு தலித் குடும்பமாக, மூன்று தலைமுறைகளில் அவர்களுக்கு நடந்த எண்ணற்ற நிகழ்வுகளின் தொகுப்பு தான் அந்தக் கதை. என் கதையை, என் வலிகளை, வெற்றிகளை, பண்பாட்டை எனையன்றி வேறு யார் சிறப்பாக எழுதிவிட முடியும் என்ற கர்வம் அந்த எழுத்தில் தெரியும்.
ஆனால் கதையின் ஆதி வடிவம் பேச்சாக தான் இருந்திருக்கும். அதற்கு பின் தான் எழுத்து தோன்றியிருக்கும். கதை வாய்வழியாக மட்டுமே சொல்லப்பட்டு வந்த காலத்தில். கதையின் முக்கியமான அம்சம் கதை சொல்லல் தான்.
சிறு வயதில் அம்மாவிடம் தூக்கம் வரலை என சொன்னால், நூறிலிருந்து ஒன்று வரை எண்ணு என்பார். அப்போதும் தூக்கம் வரலை என்றால், குரங்கு அப்பம் பகிர்ந்த கதையை சொல்லுவார். எப்போது கேட்டாலும் அதே கதையை தான் சொல்லுவார். சளைக்காமல் கேட்பேன். ஏனென்றால் கதை கேட்பவனுக்கு தேவை கதை அல்ல, கதை கேட்கும் அனுபவம் தான். குரலில் உள்ள ஏற்ற இறக்கம், கதை நடக்கும் களத்தைப் பற்றிய வர்ணனை என கதை கேட்பது, மனதில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு சமம்.
எல்லாராலும் அப்படி கட்டிப்போடும் ஒரு கதையை சொல்லிவிடவும் முடியாது. இது வரை நீங்கள் பவா செல்லதுரையை பற்றிக் கேள்விப்படவில்லை என்றால், நீங்கள் வாழ்வில் ஒரு பேரனுபவத்தை பெறாமல் இருக்கிறீர்கள். ஒரு வேளை அவரது கதைகளை நேரிலேயே கேட்டிருந்தால், நீங்கள் என்னைவிட பாக்கியசாலி!
பவா செல்லதுரை கதை சொல்வதில் ஒரு தேர்ந்த ஒவியருக்கு சமம். கண் முன்னே தூரிகை இன்றி காட்சிகளை அப்படியே ஓட விடுவார். புத்தக கண் காட்சியில் ஆசை ஆசையாய் வாங்கி. அரைகுறையாய் படித்து, தூசி படிய வைத்திருக்கும் நூல்களை ஒன்றரை மணி நேர கதைகளில் கண் முன் நிறுத்துவார். அவரது கதைகளை கேட்டு, ஆர்வம் வந்து படிக்க ஆரம்பித்த புத்தகங்கள் பல உண்டு.
இது வரை நான் படித்த புத்தகங்களின் ( ஒன்று இரண்டு தான்) கதையைக் கூட பவாவின் குரலில், அவரது பார்வை மற்றும் நகைச்சுவையான கமெண்ட்களுடன் பார்க்கும் போது புதிதாய் கதை கேட்பது போலத் தான் இருக்கும். பயணங்களில், தூக்கம் வராத இரவுகளில் கேட்டு கேட்டு சலித்த பாடல்களை விடுத்து, கதைகளில் மூழ்கலாம். யாருக்கு தெரியும், அன்றைய மனகுழப்பத்திற்கான விடை, அந்தக் கதையிலும் ஒளிந்திருக்கலாம்.
Comments