கோடையை வெறுப்பவர்கள் தான் இங்கு அதிகம். வெயில் தாங்கவில்லை, வியர்வை சொட்டுகிறது, நா வறண்டுவிடுகிறது என அவர்களுக்குக் கோடையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. ஆனால் என்னைப் போன்ற குளிர் அண்டாத கோடை விரும்பிகளுக்குத் தான் தெரியும். முடக்கி விடும் குளிரைவிட, சுண்டிவிடும் வெயில் எவ்வளவோ மேல். இளைப்பாறச் செல்லும் மலைப் பிரதேசங்கள் குளிராக இருக்கலாம், ஆனால் மக்கள் பிழைக்க வரும் ஊர்களில் எப்போதும் கோடையின் ஆட்சி தான். அந்த சுளீரென்ற காலை வெயில் தான், மனிதனை சுறுசூறுப்பாக வைத்திருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அலை அலையாய் மக்கள் பிழைப்பைத் தேடி ஒட வைப்பது நிச்சயம் அந்த வெயில் தான்!
காலையின் மிதமான வெயில், மதியத்தின் கடுமையான சூட்டை வாரி வழங்கும் வெயில், பின் மாலையில் பிழைத்து போ எனச் சொல்ல வரும் மஞ்சள் வெயில். இந்த கோடை வெயிலைப் போலவே ஒரு அழகான காதல் கதை தான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை.
வெயிலை தவிர வேறெதையும் அறியாத கோவில்ப்பட்டியில், கோடைக்காலத்தில் வரும் பறவைகள் போலச் சந்திக்கும் சில்வியாவையும் சுப்புவையும் சுற்றித் தான் கதை நிகழ்கிறது. வெயில், கோடை, காதல் குறித்து எழுத நினைப்பவர்கள், இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
“ ஒரு வேளை மறக்க முயற்சிக்கிறேன் என்பதால் தானோ என்னவோ கூடுதலாக நினைவுக்கு வருகிறது.”
“சிலர் டீச்சராகவே பிறக்கிறார்கள் என்பது உண்மை தான் போலும்”
“கிராமம் என்பதே கதைகளின் பிறப்பிடம் தானே”
“எந்தப் பெயரையும் அழகாக்கிவிடக் கூடியவர்கள் பெண்கள்”
“கோடையில் பிறக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் வெயில் ஓடுகிறது”
“ கோவிலின் உள்ளேயும் ரயில் நிலையத்திலும் பெண்களுக்கு அழகு கூடிவிடுகிறது”
“ஒரு பெண் அலுமினிய தூக்குவாளியில் உள்ள கஞ்சியை ஊறுகாய் தொட்டுக் குடிக்கும்போது வெயிலையும் சேர்த்துத் தொட்டுக் கொண்டுதானே குடிக்கிறாள்”
“வீடுகளின் நீர்த்தொட்டியினுள் கரைந்துவிடுகிறது சூரியன். இரவில் குழாயில் தானே கொட்டுகிறது வெந்நீர்”
“சில சாக்லேட் உறைகள் தங்க ரேகைகள் போல மினுமினுப்பான காகிதம் சுற்றிக் காணப்படுமில்லையா. அது போன்றுதான் பதினைந்து வயதின் ஆசைகளும்”
இப்படி குறைந்தது 50 அருமையான கற்பனைகளையும், உவமைகளையும், காட்சிகளையும் இந்த புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்ட முடியும்.
இந்த கதை எல்லாரும் கடந்து வந்திருக்கக் கூடிய ஒரு பள்ளி கால காதல் அனுபவம் தான் என்றாலும், அதைத் தாண்டி நமக்கு இந்த கதையை இணக்கமாக்குவது சில்வியா தான்! ஒரு சிறு நகரத்து பையனுக்கு தன்னால் முடிந்த கலாச்சார அதிர்வுகளை (cultural shocks) தந்துவிட்டுப் போகிறாள்.
சில்வியா. எல்லாரும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடினால், இவள் ஏறி நின்று ஆடலாமா என்பாள்? நோஞ்சான் என பட்டப்பெயர் வைப்பாள். பத்து கல்யாணம் பண்ணிக்கிட போகிறேன் என அதிர சிரிப்பாள், சுத்த சைவம் சாப்பிடுபவனுக்கு முட்டை அவித்து கொண்டு வருவாள், வம்பு செய்தால் உடனுக்குடன் பழிதீர்ப்பாள், சிறுபிள்ளை போல வண்ணத்துப்பூச்சியுடைய நிறத்தைக் கையில் ஒட்டிக்கிட்டா அதிர்ஷ்டம் வரும் என்பாள், பொழுது போகவில்லையென்று தீயணைப்பு படை ஆபீஸில் ஹெல்மெட் திருடுவோமா என்பாள். இப்படி ஒருத்தியை, பின்னே ஒரு நாள், வாழ்க்கைத் துணையை இழந்து, குறும்பைத் தொலைத்து, துணிச்சல் அற்று, ஒரு பேருந்து நிறுத்தத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்க நேர்ந்தால் அதை அப்படியே கடந்து போய்விட முடியுமா என்ன?
உலகம், சமூகம், சரி, தவறு, கட்டுப்பாடு, இவையெல்லாம் தாண்டி அந்த நொடி சந்தோஷம் இருந்தால் போதும் என இருந்தவள். வருடத்தில் ஒரு நாள் கிறிஸ்துமஸ் அன்றாவது மகிழ்ச்சியாய் இருந்திட முடியாதா என மாறுவாள் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அவளும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
காலம் தான் எல்லாவற்றையும் சுருட்டி வாயில் போட்டுக் கொள்கிறது. கேட்டதைப் பிடுங்கி, கேட்காததை கொடுத்து, அழகைச் சிதைத்து, உறவுகளைக் கலைத்து ஏதேதோ செய்து விடுகிறது.
ஒரு நல்ல வெயில் காலத்தில் மலர்ந்த இவர்களது நட்பு, சில கடுமையான, தனிமையான வெயில் காலங்களை கடந்திருந்தாலும், இப்போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கும் நிலையிலாவது வைத்திருக்கிறது. ஒரு திருமணம் ஆன ஆணுக்கும், கணவனை இழந்த பெண்ணிற்கும் இடையில் காதல் அல்லாது வேறு உறவு இருக்க முடியாது என உலகம் சொல்லலாம். ஆனால் இருக்கத் தான் செய்கிறது. சில்வியும் சுப்புவையும் போல. அன்புக் காட்டுவதற்கு தானே உறவு, அதற்கு ஒரு பெயர் என்னத்துக்கு?
Comentários