இந்த வருடம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறோம். ஆனால் இந்த வருடம் முடியும் போது, இன்னொரு விஷயமும் நடக்கும். இந்த தசாப்தம் முடிய போகிறது. 90களில் பிறந்த பலருக்கும் இந்த பத்தாண்டுகளில் தான் நிறைய மைல் கல்கள் வந்திருக்கும். பள்ளி படிப்பை முடித்தது, கல்லூரியில் சேர்ந்தது, கல்லூரியை முடித்து வேலையில் சேர்ந்தது என அடுத்த 40-50 வருடத்திற்கான அடிக்கற்களை இந்தப் பத்தாண்டுகளில் தான் நட்டிருப்போம்.
எனக்கு எழுத வரும் என்பதை கண்டுபிடித்தது, என் எழுத்துக்கான முதல் அங்கீகாரத்தை பெற்றது, அதையே என் தொழிலாக கொள்ளலாம் என முடிவெடுத்தது, முதல் வேலையில் சேர்ந்தது, முதல் சம்பளம் வாங்கியது, வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது, தவணை முறையில் சுதந்திரத்தை அனுபவித்தது, முதல் முறையாக விமானத்தில் சென்றது, தனியாக பயணம் செய்தது, வங்கி கணக்கு துவங்கியது, முதல் முறை என் கணக்கில் ஒரு இலட்சம் ரூபாய் சேர்த்தது, சிந்திக்க துவங்கியது, கேள்விகள் எழுப்பியது, தமிழ் வாசிப்பு அதிகரித்தது, கடவுள் நம்பிக்கையை தொலைத்தது, கொள்கைகள் என்றால் என்னவென்று புரிந்தது, அதை ஏன் நாம் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் கிடைத்தது, சகிப்புத்தன்மை வளர்ந்தது, அரசியல் பேசியது, பெண்ணியம் புரிந்தது என இந்த 10 ஆண்டுகள் வாழ்க்கையை திருப்பி போட்டவை தான்!
பள்ளி, கல்லூரி, வேலை என மூன்று வெவ்வேறு நிலைகளும் பத்தாண்டுகளில் நடந்ததாலோ என்னவோ ரொம்ப நீண்ட காலமாக தெரிகிறது. 2010 இல் இதே சமயம் 10 வகுப்பு அடுத்த வருஷம், நல்லா படிக்கணும், அப்போது தான் பையாலஜி எடுத்து டாக்டர் ஆக முடியும் என காதில் விழுந்தது. நான் டாக்டரும் ஆகவில்லை, அறிவியல் சார்ந்து படிக்கவும் இல்லை. அதற்கு நேரெதிரான திசையில் இருக்கிறேன்.
” உலகம் ஒரு திசையில் நடந்திட, விரைந்து மறுதிசையில் நடக்கிறேன்” என என் வாட்ஸாப் ஸ்டேசிற்கு ஏற்ற மாதிரி தான் வாழ்க்கையும் நகர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த நகர்வுகள் எல்லாமே நம் ஆளுமையை கட்டமைத்தது என நினைத்துக் கொண்டால் எல்லாமே மேல்நோக்கியது தான். 2010 இல் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு திட்டம் நிச்சயம் இருந்தது, அது 2012 லேயே படுதோல்வி அடைந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்கும் திட்டம் இருக்கிறது, ஆனால் வாழ்க்கை அதையெல்லாம் கலைத்துப் போட்டு, பிடிக்காததை கொடுத்து, அதையே பிடிக்க வைத்து, நம் இரசனையை நமக்கே அறிமுகப் படுத்தி நம்மை மீண்டும் வளர்த்தெடுக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.
Commentaires