top of page

உலகின் மனசாட்சி

மண்ணுக்கு மேலே இருந்து பார்க்கும் போது சில நேரம் செடியும், களையும் ஒன்று போலத் தான் தெரியும். அதே போல் தான் பிற்போக்குத்தனங்களும், பண்பாடும். பண்பாடு என்றப் போர்வையில் இங்கு பல பிற்போக்கான சிந்தனைகள் வலம் வருகின்றன. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் எனக்கு கடவுள் பக்தி உள்ளவர்களிடம் கோபம் வரும்.

கடவுள் ஒரு அருமையான கான்செப்ட். அதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் அது எவ்வளவு அறிவுக் கண்ணை மறைக்கிறது என அவர்கள் உணருவதே இல்லை. கடவுளுக்கு மூன்று வேலைகள் இருப்பதாக சொல்வது உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல். படைத்தவன் கடவுள் என ஒப்புக்கொண்டால், பரிணாம வளர்ச்சி என்ற அற்புத சிந்தனையை மறுப்பதற்கு சமம். பாதுகாப்பு என்பது இந்தியர்களின் மரபணுவிலேயே இல்லையோ என தோன்றும் அளவிற்கு சாலைகளில், வாகனங்களில் அத்தனை சாகசம் புரிவார்கள். பின்னர் காக்க வேண்டியது கடவுள் தானே என்பார்கள். அதனால் காத்தலும் கடவுளுக்கு இல்லை. அழித்தல். இயற்கை சீற்றம் வந்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விட்டோம் என சொல்லும் யாரும் இயற்கையை எப்படி பிழிந்து எடுத்து, நாம் குளிர் காய்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதனால் அழிவு என்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் தான்.

கடவுளுக்கு இதையெல்லாம் விட ஒரு முக்கியமான வேலை உண்டு. அது தான் உலகின் மனசாட்சியாக செயல்படுவது. நம் எல்லாருக்கும் உள்ளே ஒரு குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதைக் கேட்டு தான் செயல்படுகிறோம். ஆனாம் அந்த குரல் பிரள்வதற்கு, நிறைய வாய்ப்பு உண்டு. அப்போது இந்த பெரிய குரல் செயல்பட வேண்டும். கடவுள் என்பது பயம் கலந்த நம்பிக்கை. தீய வினை செய்தால், வினையறுக்க வேண்டிவரும் என்பதற்கு மனிதன் கொடுத்த உருவமே கடவுள். ஒரு மிகப் பெரிய உளவியல் ஞானியின் மூளையில் உதித்த சிந்தனை தான் கடவுளாக இருந்திருக்க வேண்டும்.

இப்படி யோசித்து பார்த்தால் கடவுள் நம்பிக்கை ஒரு நல்ல விஷயம் தான். எல்லாரும் இதே நோக்கத்துடன் தான் கடவுளை அணுகுகிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி அணுகினால் நன்றாக இருக்கும் என்பதே இந்த பகுத்தறிவாளனின் சிறிய வேண்டுகோள்.

மீண்டும் முதல் பத்திக்கு வருகிறேன். கடவுள் என்பது அழகான நந்தவனம் தான் ஆனால் அதில் ஒராயிரம் களை இருக்கிறது. ஒரு நாள் ஒரு புல், பூண்டு கூட இல்லாத அளவிற்கு இந்தக் களை வளர்ந்து விடும். களையெடுத்தால் தான் வனம் வளரும். களையெடுப்போம்!

Comments


bottom of page