top of page

உலகைக் கட்டியிழுத்தாள்

நான் அவளை பார்க்கும் போது, அவள் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவள் அந்த பால்கனி கம்பியில் தன் கைகளை வைத்து இந்த உலகையே கட்டிப்போட்டிருக்கிறாள். இது ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதிய வரி. இந்த வரியை படித்த போது உங்கள் மனதில் அந்த பெண்ணின் சித்திரம் எப்படியானதாக இருக்கிறது?

அந்தப் பெண்ணுக்கு உலகை கட்டிப்போடும் அளவிற்கு அப்படி என்ன குணம் இருந்திருக்கும். அழகா? அறிவா? ஆளுமையா? ஒவ்வொருத்தரது கற்பனைக்கும் ஒவ்வொரு நியாயம். மூன்றுமே இருக்கலாம், மூன்றுமே இல்லாத வேறொன்றாகவும் இருக்கலாம்.

எனக்கு என்னவோ அந்தப் பெண், செரீனா வில்லியம்ஸ் போன்று உருவெடுத்தார். செரீனாவை பார்க்கும் போதெல்லாம் ஒரு கம்பீரம் தெரியும். எனக்குத் தெரிந்து உலகை கட்டியிழுத்து தன் கைகளில் வைத்திருக்க கூடியவர் தான் அவர். இதே செரீனாவை பெண்மைக் குறைவான தோற்றம் உடையவராக ஏளனம் செய்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

பெண்மை உடலில் உள்ள ஒரு ரசாயன கலவை தான். ஆனால் உலகம் பெண்மைக்கு ஒரு உருவம் வைத்திருக்கிறது, உடைகள் வைத்திருக்கிறது, குணங்களும் கூட உண்டு. இதிலிருந்து கொஞ்சம் பிசகினாலும் அவளுக்கு வைக்கப்படும் பேர்களை எழுத அகராதிகளில் கூட இடம் பற்றாது.

ரொம்ப உயரத்திற்கு சென்ற பல பெண்களும், இந்தப் பெயர்களை எல்லாம் சுமந்தவர்கள் தான். கண்களின் வழியாகவே உன் வேலையை பாத்துட்டு போ  என்று சொல்லும் பெண்ணை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். அவளுக்கும் அப்படியிருக்க சில நியாயங்கள், காரணங்கள் இருக்கும் தானே? ஜெயலலிதா பற்றிய Queen தொடரை பார்த்த போதும் இதே தான் தோன்றியது. ஜெயலலிதாவை ஆண்கள் எவ்வளவு வெறுத்தார்கள் என்பதை விட, பெண்களுக்குள் இருக்கும் ஆணாதிக்க மனநிலை தான் அதிகம் வெறுத்திருக்கும்.

யாரையுமே பக்கத்துல சேத்துக்காது அந்த அம்மா! அப்படி என்ன ஆணவம் என வீடுகளிலேயே பேசுவார்கள். யாரும் பிறக்கும் போதே கடினமான தோலுடன் பிறப்பதில்லை, நம் வாழ்வின் அனுபவங்களும், அவ்ற்றின் தரமும் தான் நமது தோலின் தடிமனை நிர்ணயிக்கின்றன. ஒருவரை நாம் இரும்பு பெண் என்று சொல்லும் போது அவருக்கும் அதை ஒரு கீரீடமாக சூட்டுகிறோமா இல்லை அதை அலங்கரிக்கப்பட்ட அவமானச் சொல்லாக சொல்கிறோமா என்று யோசிக்க வேண்டும். அப்படி நமக்கு வலிமையான பெண்கள் மீது அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி? ஒரு பிரபலமான வாக்கியம் இருக்குமே. நம் எல்லாருக்கும் வலிமையான பெண்களை பிடிக்கும். ஆனால் அது அவரை நேரில் சந்திக்கும் வரை தான்.

வலிமையான பெண்களை நாம் ரசிப்பது வீதி வரை தான். அலுவலகத்தில் இருந்தால் பின்னால் பேசி தலையில் கொட்டுவோம். நம் வீடுகளிலோ வலிமைக்கும், சுய சிந்தனைக்கும் இடம் இல்லை. பெண் குழந்தைகளுக்கு கல்பனா சாவ்லாவை முன்மாதிரியாக அடையாளம் காட்டுபவர்கள், சரி பிள்ளை படித்து நாசாவில் வேலைக்கு சேரும் என்ற எண்ணத்தில் தான். அவர் அங்கு அவர் ஒரு வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என தெரிந்தால் அவருக்கு அந்தப் பட்டியலில் இடம் கிடைத்திருக்காது.

தனக்கு என்ன வேண்டும் என தெளிவாக தெரிந்த பெண்ணைக் கண்டால் எல்லாருக்கும் ஒரு வித பயம் தான். ஏனென்றால் அவளுக்கு படிப்பிக்க எதுவும் இல்லை, தனக்கு தேவையானதை அவளே வாங்கி கொள்கிறார், அவளுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு, அவளே சென்று வருகிறாள். அப்படி ஒரு பெண்ணை வீண் உணர்ச்சி குழம்புகளில் மூழ்கடிக்க முடியாது, வெற்று மிரட்டல்களுக்கு அடிப் பணிய வைக்க முடியாது.

ஆனால் அப்படி ஒரு பெண்ணை காதலித்து பாருங்கள், உலகம் அவளை காதலிக்க முடியாது என்று சொல்லும். ஆனால் அந்த சுவர்களை தாண்டி, அவளை நீங்கள் காதலித்தால், அவள் உலகையே உங்களுக்காக கட்டிப்போடுவாள்!

Commentaires


bottom of page