top of page

ஈரமான பாடலே

ஒன்று இருக்கும் போது, இன்னொன்றை தேடுவது தான் மனித இயல்பு. அப்படி மழை சூழ்ந்து நிற்கும் இந்த நாளில் கோடையைப் பற்றி எழுத கை செல்கிறது.

புழுக்கமான ஒரு கோடை கால நள்ளிரவில் தான் இந்தப்பாடலை முதலில் கேட்டேன். எத்தனையோ மழைப்பாடல்களை இந்திய சினிமா கண்டிருக்கிறது. இது இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் என்று முழுக்க முழுக்க மழையில் நனைந்து ஆடி களித்த பாடல்களுக்கு கூட இவ்வளவு ஈரம் இருந்திருக்காது.

மழைத்துளிகளை சுமந்து வரும் ஒரு காற்றை நம் மீது வாரி இரைத்துவிடும், மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் வரும் இடுக்கி எனும் பாடல். கேரளாவில் உள்ள இடுக்கி நேரில் பார்க்கக்கூட இவ்வளவு அழகாக இருந்திருக்குமா தெரியவில்லை. இந்த பாடலில் பெய்யும் சாரல் மழை, பச்சை பரப்பு, ஆற்றங்கரை, அவித்து சீவப்படும் மரவள்ளி கிழங்கு என மழைக்கான இலக்கணமே இந்தப்பாடலின் முடிவில் எனக்கு மாறிப்போய் இருந்தது. பாடல் என்று இல்லை, இந்த படத்திற்கே ஒரு ஈரத்தன்மை உண்டு. இதற்கு பின் கோடை காலம் வரும் போதெல்லாம், இந்தப்படத்தை பார்த்து, கோடையின் தாக்கத்தை குறைக்கவும் முயன்றிருக்கிறேன். என்றாவது ஒரு நாள், இடுக்கியை ஒரு மழை விட்டு ஒய்ந்த மாலை நேரத்தில், முழுவதுமாக இடுக்கியை சுற்றிப்பார்க்க வேண்டும்.(https://youtu.be/NL5bYMXCSJ0)

இசையின் ஊடே எப்படி இப்படி ஈரத்தை கடத்திவிட முடிகிறது என்பது இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். பனிப் பிரதேசங்களை காட்டிய எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், ரோஜாப் படத்தின் புது வெள்ளை மழை போல சில்லென்ற ஒரு பாடலை பார்த்ததில்லை. காட்சிகளை பார்க்காமல் வெறும் பாடலைக்கேட்டால் கூட குளிரும். பல வருடம் கழித்து காற்று வெளியிடையில் வான் வருவான் என்றப்பாடலில் இதே குளிரடித்தது. இதற்கு காரணம் ஷாஷா திருப்பதியின் குரலா, இல்லை இசையின் நடுவே வரும் புல்லாங்குழலா, வைரமுத்துவின் வரிகளா தெரியவில்லை.

பரணி போன்ற வீரம், போர் குறித்த இலக்கியங்களில் அதிகமான வல்லின எழுத்துகள் இருக்கும். அந்த வல்லின எழுத்துகளுக்கு ஒரு கடுமை இருக்கும். ஒரு மென் உணர்வை கடத்தும் பாடல்களில் மெல்லின, இடையின எழுத்துகள் அதிகமாக இருக்கும். சொற்களுக்கும், அதன் ஊடாக ஏற்படும் இசைக்கும் ஒரு பருவ காலத்ததை கடத்தக்கூடிய திறமை இருக்கத்தான் செய்கிறது.

இது முடிவில்லா கட்டுரை தான். ஆனால் தொடர்ந்து தினமும் எழுதும் போது, மூளையை அடைத்துக்கொண்டிருக்கும் சில சிந்தனைகளை வெளியேற்றினால் தான், புதிய எண்ணங்களை குடியமர்த்த முடியும்.

ஒரு சுட்டெரிக்கும் கோடை நாளில் இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படட்டும்.

Comments


bottom of page