சில புத்தகங்கள் தான் நம் சிந்தனை ஓட்டத்தை வேகமாக செலுத்தும், இது வரை இரத்தம் பாயாத மூளையின் செல்களுக்கு இரத்தம் பாய்ச்சும். இது பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்திராத, தற்செயலாக ஏதோ ஒரு பக்கத்தை பிரட்டிய புத்தக்கத்தில் தான் நிகழும். நம் இரசனை இத்தனை முதிர்ச்சியானதா என்று மனம் குதூகலிக்கும், உடனே அதை யாரிடமாவது சொல்லிவிட துடிக்கும். அப்படி ஒரு சிந்தனையோட்டம் தான் இது. தோன்றிய எண்ணங்களை, தோன்றிய வரிசையிலேயே எழுதுகிறேன்.
வாளேந்திய வீரன் ஒருவன், இரவுக் குறிக்காக காத்திருந்து, ரகசியமாக தலைவியை பார்த்துவிட்டு போகிறான். அவன் ஒரு நாள் வாராது போனாலும், தலைவி தோழியிடம் நொந்து கொள்வாள். இன்று நாம் குறுஞ்செய்தியில் சொல்வது போல ஒரு இமோஜியில் அவள் சொல்லி முடிக்க மாட்டாள். அவன் வளர்ந்த இடம், அங்கு விளையும் உணவு, அவன் வரும் வழியில் இருக்கும் முட்களும், வழிமறிக்கும் விலங்குகளும், அதை ஒரு மரத்தின் மேல் இருந்து பார்க்கும் பருந்துகளும், அன்னங்களும், மயில்களும் என நீட்டி முழக்கித் தான் சொல்வாள். இப்படி நூற்றுக்கணக்கான பாடல்களை உடையது தான் அகநானூறு. இன்றைய பாடலாசிரியர்கள் சொல்லும், சொல்லுப்போகும் எல்லா உவமைகளையும் அகநானூரில் கண்டெடுக்கலாம். ஆனால், 70-80 கால சினிமாவில் இன்னும் நிலவையும், பூவையும், மேகத்தையுமே சுற்றி வருகிறது இவர்களது பாடல்கள்.
சுற்றி முற்றி பார்க்க நேரம் இல்லாமல், எப்போதும் மொபைல் ஃபோனை பார்த்தபடி நடக்கும், சாப்பிடும், களிக்கும், கழிக்கும் இனம் தான் ஒரு காலத்தில், அழகிய நெற்றியுடையவள்களையும், வெட்சிப் பூ மாலை அணிந்தவர்களையும் பாடியது என்பது தான் மிகப் பெரிய வியப்பு. இத்தனை பாடல்கள் புத்தகம் ஏறியிருக்கின்ற என்றால், புத்தகம் ஏறாப் பாடலகள் எத்தனை எத்தனையோ! அகம் தமிழர் வாழ்வில் எத்தனை பெரிய அங்கம் என புரிந்து கொள்ள இது ஒரு சோற்றுப் பதம் தான்!
இன்று காதலை பெரும்பாவமாக பார்க்கும் சமூகம் தான் அன்று உடன்போக்கு, அதாவது ஓடிப்போவது பற்றி பல பாடல்களை இயற்றி உள்ளது. இன்று இருக்கும் நம் வாழ்வை நவீனமான ஒன்றாக கருதுகிறோம் ஆனால் நவீனம் என்பது உடையிலோ, ஆடம்பரத்திலோ இல்லை. நவீனம் எப்போதும் மனம் சார்ந்த ஒன்று தான். யாதும் ஊரே யாதும் கேளிர் என்பது தானே உலகின் முதல் நவீன அரைக்கூவல். அப்படி பார்த்தால் சங்க காலம் தானே உண்மையான நவீன காலம். வரலாற்றை திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தால், முன்னேற முடியாது என்பவர்கள் உண்டு. ஆனால் நாம் வரலாறு என்பது எது என்பதனை தெளிவாக வரையறுக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். நம் கலாச்சரம் என்றப் பெயரில் நமக்கு திணிக்கப்படுபவை எவை, நாம் தொலைத்த மரபுகள் எவை என அறிந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.
நம் ரசனைக்கு மீறிய புத்தகங்களை, படங்களை ஏன் படிக்கவோ, பார்க்கவோ வேண்டும் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். ரசனைகள் ஒன்றும் திட்டமிட்டு கட்டிய கூண்டு வீடுகள் இல்லை. அவை லேசாக வேய்ந்த கூரை வீடுகள், கீற்றுகளின் ஓட்டைகள் வழி எட்டிப்பார்த்தால் ஆகாசமே நம் வசம் தான். இரசனைகளை விரிவு செய்வோம்!
Comments