top of page

இனிமேல் FEMALE

புத்தாண்டு கொண்டாட்டங்களில் முன்பெல்லாம் பெண்களே இருக்க மாட்டார்கள். இப்போது பார்த்தால் பெண்களும் புத்தாண்டு அன்று இரவெல்லாம் வெளியே இருக்கிறார்கள் என்ற குரல், 2020 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையிலும் கேட்பது வருத்தம் தான். ஆனால் பெண்கள் இப்படி பொதுவெளியை ஆக்கிரமிப்பது உண்மையில் மிகவும் தேவையான சமூக நகர்வு.

ஒரு ஆண் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தாலும் அவனுக்கு ஒரு வெளிவட்டம் இருக்கும். பொழுது விடிந்தால், எங்காவது கால் சட்டையை மாட்டிக்கொண்டு சுற்றிவிட்டு வருவான். அந்த சுற்றுதலுக்கு எந்த நோக்கமோ, காரணமோ இருக்காது. இந்த எந்த நோக்கமும் இல்லாது வலம் வருதல் பெண்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பதில்லை. ஏதோ ஒன்று வாங்க, வங்கிக்கு செல்ல, வேலைக்கு செல்ல என செப்பல் அணியும் போது, காரணமும் அணிய வேண்டும். அந்த காரணம் தீரும் போது கூடடைய வேண்டும். பணியை முடித்து அவசரம் அவசரமாக வீடு திரும்பும் எத்தனையோ பெண்களை தினமும் பார்க்கிறேன். ஆண்கள் பணி முடிந்து, பின் டீ குடிக்கலாமா, நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாமா என யோசித்துக் கொண்டு இருப்பார்கள்.

பெண்களின் பொது வெளி என்பது உண்மையிலேயே ரொம்ப சிறியது தான். பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என நான்கு சுவர்களாலான இடங்களே நவீன பெண்களுக்கும் வாய்த்திருக்கும் வெளி. இதை பொதுப்படுத்தவில்லை. சராசரியாக இது தான் நிலவரம்.

கூட்டமான முதல் நாள் திரையரங்குகள், இரவு நேரம் வேலை இருக்கும் பணிகள் என எங்கெல்லாம் பெண்களை காண்பது அரிதாக இருக்குமோ, அங்கெல்லாம் பெண்களை பார்ப்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வை தரும் என்பது உணர்ந்தால் மட்டுமே தெரியும். பெண்ணியம் என்றால் ஆண்கள் செய்கிற தப்புகளை செய்வதா என்று நரம்பு புடைக்க வேண்டாம்! இந்த பொதுவெளி பெண்களுக்கு வசப்படும் போது தான் பாலியல் அத்துமீறல்கள் குறையும். அந்த வெளி திரையரங்காகவும் இருக்கலாம், சாலைகளாகவும் இருக்கலாம்.

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே ஆயிரக்கணக்கான கருமுட்டைகளுடன் தான் பிறக்கிறது. அப்படி உங்கள் பாட்டி பிறக்கும் போதே உங்கள் அம்மா ஒரு கருமுட்டையா இருந்தது போல, நம் அம்மா பிறக்கும் போதே இருந்த கருமுட்டைகளில் நாம் இருந்திருப்போம்.

The future is female என்ற வாக்கியத்தை முன்னிறுத்தும் வகையில் தான் இப்போது உலகமே சுழல்கிறது. திரைப்படங்கள், பெறும் நிறுவனங்கள் என பெண்களுக்கான இடம் பெரிதாகி கொண்டே போகிறேது! ஆண்களுக்கு சரிசமமாக வரவில்லை தான். ஆனால் வந்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஏதோ ஒரு அலுவலகத்தில் அதிகமான பெண்கள் இருந்தால், பெரிய பதவிகளில், முக்கியமான பொறுப்புகளில் பெண்களை பார்க்கும் போதெல்லாம் உள்ளிருக்கும் அந்த ஆதி பெண் மகிழ்கிறாள். நமது கருமுட்டைகளில், நமக்கு முந்தைய தலைமுறை பெண்களின் சுவடுகள் இருப்பதாலோ என்னவோ இந்த அகமகிழ்வு சாத்தியமாகிறது.

உண்மையிலேயே எதிர்காலம் பெண்களுக்கானது தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், அடுத்த பத்தாண்டுகளை பெண்கள் தான் வளமாக்க போகிறார்கள்.

அடுத்த பத்தாண்டுகளில், எல்லா பெண்களுக்கும் பொது வெளி பெரிதாக வேண்டும். அதை முன்னிறுத்தும் அரசுகளும், ஆளுமைகளும், நிறுவனங்களும் பெருக வெண்டும்! இது தான் வல்லரசிற்கான பாதை!

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் வரும் இருச்சி பாடல்வரிகளுடன் இந்தப் புத்தாண்டின் முதல் பதிவை நிறைவு செய்கிறேன்.

கங்குல் (இரவு) விடிந்து கொள்ளுது

இவள் காட்டும் திசையில் உலகம் செல்லுது

ஊரின் கதவு திறக்குது

இந்தப் போரில் பெண்மை ஜெயிச்சு நிக்குது!

Comentários


bottom of page