top of page

இது மனித நதி

மகாநதி திரைப்படத்தில், கமல்ஹாசனுக்கு, பூர்ணம் விஸ்வநாதனுக்கும் நடக்கும் உரையாடல் தான் இது. நேபியர் பாலத்தில் கூவம் ஆற்றை பார்த்தபடி நடக்கும் இந்தக் காட்சி.

PV : நம்ம போயிடலாம், நாத்தம் குடல அறுக்குறது!

KH : ஏன் இருந்து அனுபவிங்களேன். இன்னிக்கு நேத்தா நாத்தம் அடிக்குது. அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை, நீங்க தான் பூஜை ரூமுல போய் மந்திரம் சொன்னதும் கூரைய பிச்சுக்கிட்டு தங்கக் காசு கொட்டுமே!

PV : ஒருத்தன நினைச்சுட்டு எல்லாரையும் பழிக்க கூடாது. சமுதாயம்ங்கிறது…

KH : அத நீங்க உங்க பூஜை ரூம் மாதிரில்ல வச்சிருக்கனும். இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கனால தான் அவன் அவன். நானும் கொஞ்சம் ஒன்னுக்கு அடிச்சா என்ன கெட்டுடும். காரி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சுக்கிட்டே இருக்கான். இனிமே நானும் அப்படி தான் செய்யறதா இருக்கேன்.

PV : அப்போ எதிர்காலம்?

KH : என்ன எதிர்காலம்? எனக்குனு யாரு இருக்கா? இந்த மனுஷங்க மேல உலகத்து மேல இருந்த நம்பிக்கையே போயிருச்சு ஐயரே. இந்த கன்னகி ஏன் மதுரைய எறிச்சானு இப்போ தான் புரியுது. தப்பே இல்லை. இந்த ஆடோம் பாம், நியூக்களியர் பாம் எல்லாம் போடலாம். ஏனா சாகப்போறவங்களில நல்லவங்கனு கொஞ்ச பேர் தான் இருப்பாங்க!

இப்படி ஆதங்கத்தின் விளிம்பில் கமல்ஹாசன் பேசி முடித்த அடுத்த நொடி, திரும்பி பார்த்தால், தொலைந்த போன மகன் ஒரு கழைக் கூத்தாடி கூட்டத்தில் அந்தரத்தில் நடந்துக் கொண்டு இருப்பான். அந்த கூட்டத்தின் தலைவனை அடித்தப் பிறகு தான் தெரியவரும். இத்தனை நாள் மகன் பரணியை பாதுகாத்து வளர்த்ததே இவர்கள் தான் என்று. இறுதியில், உறங்கிய பரணியை அப்படியே தூக்கி கமல்ஹாசன் கையில் கொடுத்து, மண்ணாங்கட்டி ( வளர்ப்பு தந்தை) வழியனுப்பி வைக்கும் காட்சி தான் மனிதத்தின் உச்சம்.

வீட்டுக்கு வந்தவுடன் பரணி, பாட்டி எங்கே என்று கேட்பான். குழந்தைக்கு மரணம் குறித்த புரிதல் இருக்குமா? பாட்டி இறந்துவிட்டாள் என எப்படி சொல்வது என எல்லாரும் திணரும்போது. அவனே செத்துட்டாங்களா என்று கேட்பான். கமலின் கண்கள் கலங்கிவிடும். குடும்ப சூழல் காரணமாக, குழந்தைத்தனத்தை இழக்க கூடாத வயதில் பிள்ளைகள் இழப்பது தான் இருப்பதிலேயே கொடுமை.

மகாநதிப் படத்தை குறித்து ஒருமுறை தீவிர கமல் ரசிகையான அம்மா பேசும் போது, “அய்யோ ஒரே சோகமாக இருக்குமே”, என்று சொன்னார். மேலோட்டமாக பார்த்தால் மகாநதி, ஒரு சோக காவியம் தான். ஆனால் கசடுகளுக்கு நடுவில் வரும் இனிமைக்கு தான் அதிகச் சுவை. மகளை விபச்சார விடுதியில் பார்த்து உடைந்து போன கமல் ஹாசனை ஒட்ட வைப்பது அந்த விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் வார்த்தைகள் தான். மகளை அழைத்த செல்ல காசு கொடுக்க வேண்டும் என்றதும், அங்கே விடுதியில் இருக்கும் பெண்கள் அனைவரும் காசை வீசி எறிவார்கள்.

தவறிப்போன குழந்தையை கஷ்டத்திலேயும் வளர்க்கும் ஏழைக்குடும்பம், விபச்சார விடுதியில் இருக்கும் அன்பு பிணைப்பு, ஜெயிலில் அத்தனை கஷ்டத்திலேயும் கிடைக்கும் ஐயரின் நட்பு, வீட்டை தாங்கி நிற்கும் இரும்பு மனுஷியாய் பாட்டி சரஸ்வதி, முகம் கூட சரியாக பார்த்திடாத ஒருவனது குடும்பத்துக்கு அரணாக நிற்கும் யமுனா என அன்பின் சாட்சிகள் படம் முழுக்க நிறைந்து தான் இருக்கிறது. கர்ணனின் கண்களால் பார்த்தால் உலகமே நல்லவர்களால் ஆனது தானே?

கிருஷ்ணசாமி, காவேரி, பரணி, சரஸ்வதி, நர்மதா, யமுனா என படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கெல்லாம் நதிகளின் பெயர் தான். உண்மையில் மனிதமும் ஒரு நதி தான். நதி உதிக்கும் இடம் தூய்மையாக இருந்தாலும், செல்லும் வழியில் பல அழுக்குகளை சுமக்க நேர்கிறது. ஆனால் அவற்றால் நதிக்கு ஒரு போதும் கலங்கம் ஏற்படுவது இல்லை. மாபெரும் மனித நதியில் அவையெல்லாம் சிறு துகள்களே!

Comments


bottom of page