ஒரு கூட்டமான, ஆண்கள் நிறைந்த தள்ளுவண்டிக் கடையில் சாப்பிட உங்களுக்கும் கூச்சமாக இருந்திருந்தால், இந்தப் பதிவை தொடர்ந்து படியுங்கள்.
சரோஜா அக்கா கடையில் இதற்கு முன் ஒரு முறை சாப்பிட சென்றிருந்தோம். கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்க எப்படி சாப்பிட முடியும் என்று நகர்ந்துவிட்டோம். ஆனால் இன்று ஒரு மழை ஒய்ந்த மதிய வேளையில், மனம் மீனை தானே தேடுகிறது. கடை ஆரம்பிக்கும் முன்னே ஒரு 4 பேர் கடை முன்னே காத்திருந்தனர். மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்ததால் பெரிய கூட்டம் இருக்காது என சந்தோஷப்பட்டுக்கொண்டோம் ( சாரி சரோஜா அக்கா). கடையின் பெயர் பலகையில் ஜெயலலிதா புகைப்படம். கடைக்கு உள்ளே அக்கா சுழன்றுக் கொண்டு இருப்பதில், அவரிடம் கூட லேசாக ஜெயலலிதா சாயல் அடித்தது. பணம் வாங்கும் இடத்தில் நின்ற ஒருவருக்கு கனீரென்ற குரலில் கட்டளை வந்தது. உறுதியே செய்துவிட்டேன். தட்டுகளை கொண்டு வந்து வைக்கும் சத்தத்திற்காகவே காத்திருந்தது போல ஒரு கூட்டம் கடையை நோக்கி வந்தது. உட்கார்ந்து சாப்பிட எல்லாம் இடம் இல்லை. சாமர்த்தியம் இருந்தால் இருக்கும் 3 முக்காலிகளில் உங்களுக்கு ஒன்று கிடைக்கலாம்.
இங்கே எப்படிடா சாப்பிடுவது என கடைக்கு வந்த ஒருத்தர் தன் நண்பரிடம் கேட்டார். கடைக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதை பார்த்துவிட்டு. அட அந்த பொண்ணே சாப்பிடுது என களத்தில் இறங்கிவிட்டார். இங்க எப்படி நண்டு ஓடு எல்லாம் பிரித்து சாப்பிடுவது என அதை மட்டும் தவிர்த்தோம், கை கழுவும் போது பார்த்தால். ஒருத்தர் ஓடை கடிக்கும் சத்தம் கடக் முடக் என்றுக் கேட்டது. அட நண்டு நல்லாயிருந்திருக்குமோ என்று வருத்தமாக இருந்தது. கொஞ்சம் வட்டத்தை விட்டு வெளியேறினால் தான் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும். நண்டோ, நல்ல அனுபவமோ. இது மட்டும் நிச்சயமாக உண்மை!
எனக்கு சென்னையின் உணவு என்பது கண்டிப்பாக அக்காக்களின் உணவு தான். இந்த அக்காக்கள் பெரும்பாலும் கணவர்கள் இல்லாது, தனி மனுஷியாக கடையையும் குடும்பத்தையும் நடத்துவார்கள். பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படும் கடையில் எவ்வளவுக் கூட்டம் வந்தாலும் அதை அழகாக மேனேஜ் செய்வார்கள். உணவின் சுவையைப்பற்றி சொல்லவே தேவையில்லை. இவர்கள் மீன் வாங்க சென்றால் மட்டும் இருப்பதிலேயே நல்ல மீன்கள் தானாக பைக்குள் தாவி குதிக்கும் போல. சென்னையின் பெரிய உணவகங்களில் கூட இவ்வளவு ப்ரெஷான மீன் வகைகளை பார்த்திருக்க முடியாது.
அவர்களது கையில் தான் மீனை சுவையாக வறுப்பதற்கான சூட்சமத்தை கடல் தாய் கொடுத்திருக்கிறாளோ என நினைக்க வைக்கும் அளவிற்கு எளிய மனிதர்களின் வயிற்றை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மீன்-இங்க் ஃபுல்லான வயிறுக்கு சரோஜா அக்கா கேரண்டி!
Comments