top of page

யார் கீழே, யார் மேலே ( PARASITE)



கொஞ்ச நாட்களுக்கு முன், இந்த அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிரியை எல்லாம் யார் பயன்படுத்துகிறார்கள். மிக்சி கூடவா ஒரு அரசு கொடுக்க வேண்டும். அதைக் கூட வாங்க முடியாதவர்கள் இருக்கிறார்களா என்ன? போன்ற பேச்சுகள் கேட்டது. இது பெரும் விவாதம் ஆனது. சராசரியாக இதை படிக்கும் ஒருவருக்கு, ஆமாம் சரி தானே. என் வீட்டில் அரசு மிக்சி இல்லை, என் நண்பன் வீட்டில் இல்லை, என் சொந்தக்காரர் வீட்டில் இல்லை, அப்படி என்றால் யார் வீட்டிலும் இல்லை போல என்ற முடிவுக்கு வந்துவிடலாம். இங்கு தான் நாம் privilege என்ற வார்த்தையை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.


privilege ஒரு விநோதமான வியாதி. நமக்கு கீழ் இருப்பவர்களை பார்க்க விடாது. ஒரு selective vision disorder போல.


நமது அன்றாட பள்ளி, கல்லூரி, வேலை சுழற்சியில் அதே பேருந்து, அதே முகங்கள் என ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிடுவது இயல்பு தான். அதைத் தாண்டிய மனிதர்களை, வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள தான் பயணம் தேவைப்படுகிறது. பயணம் தரக்கூடிய பார்வையை ஒரளவுக்கு நமக்கு சில திரைப்படங்களும், புத்தகங்களும் கொடுத்துவிடும். அப்படி ஒரு திரைப்படத்தை தான் இன்று பார்க்க நேர்ந்தது. parasite என்ற கொரியன் படம். ஒரு ஊர், ஒரு சில தெருக்கள் மட்டுமே இடையில் இருக்க, இரண்டு வெவ்வேறு உலகங்கள் இயங்க முடியுமா? அதைத் தான் நமக்கு உரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். ஒரு பணக்கார குடும்பத்திற்காக வேலை செய்யும், ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் எப்படி இரு குடும்பங்களின் வாழ்க்கையையும் எப்படி கலைத்து போடுகிறது. இது தான் படத்தின் கதை.


பீசா கடையில் மகனுக்கு வேலை கிடைக்காதா என எண்ணும் ஒரு குடும்பம், மறுபக்கம் வீட்டை நிர்வகிக்க கூட ஒரு வேலையாளை அமர்த்தும் குடும்பம். இந்த வேறுபாடுகள் இல்லாத ஊரே இல்லை. உலகின் மிக நவீனமான, பணக்கார நகரங்களிலும் இந்த வேற்றுமைகள் உண்டு. குளிரூட்டபட்ட அறைகளில் வாழம் மக்கள் இருக்கும் அதே பகுதியில் வீடற்ற மனிதர்கள் தெருவில் ஒரு நிழல் தேடி அலைவதும் உண்டு. ஒரே சுற்றுவட்டாரத்தில் இருந்தாலும், அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் சந்திக்காமலேயே இருப்பது தான் அதிசயம். இந்த திரைப்படத்தின் ஒருக் காட்சி. இரவில் பேய் மழை அடித்து ஒய்ந்திருக்கும். வேலைக்காரர்கள் குடும்பம் தங்கும் வீடே மூழ்கி, அவர்கள் முகாமில் இரவைக் கழித்திருப்பார்கள். முதலாளியின் மனைவி அடுத்த நாள் காலை, காரில் செல்லும் போது, நல்ல மழை பெய்ததால், காற்று மாசு குறைந்திருப்பதாக சந்தோஷப்படுவார். ஒரே சம்பவம் எப்படி இரு தரப்பினரால், புரிந்துக் கொள்ள முடிகிறது. நன்றாக மழை பெய்தால் நமக்கு காபி, மழைச்சாரல் என மகிழ்வாக இருக்கிறது சாலையோர மக்களின் அந்த ஒரு மழைக்கால இரவு எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க வைக்கிறது.


வசதியான குடும்பத்தை ஏமாற்றி, குடும்பமாக வேலைக்கு சேர்ந்த பின்னர், எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு இரவில் நடக்கும் உரையாடல் இது.

“இவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் நல்லவர்களாக இருக்கிறார்களே. நாம் இவர்களை ஏமாற்றுவது தப்பில்லையா”

“அவர்கள் பணக்காரர்களாக இருப்பதால் தான் நல்லவர்களாக இருக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு பணம் இருந்தால், நானும் கணிவாக இருப்பேன். இந்தப் பணம் எல்லாத்தையும் சமன் செய்துவிடுகிறது. மனிதர்களிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை கூட இஸ்திரி பெட்டி போல சரி செய்துவிடுகிறது.”


தன் முதலாளியை ஏமாற்றுகிறோமே என வருந்தும் இதே நபர், ஒரே நாளில் அவரை கொல்லத் துணிவது தான் வேற்றுமையின் இன்னொரு முகம். தனது குடியிருப்பின் வாசத்தை, நாற்றம் என அவர் குத்திக் காட்டிவிடும் போது. அந்தக் கரிசனம், கொலைவெறியாக மாறுகிறது. வேற்றுமைகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகாக இருக்கும் ஆனால் அதில் உயர்வு, தாழ்வு தெரிந்தவனுக்கு தான் அதன் வலி தெரியும். அவை சீண்டப்படும் போதும், அவனிடம் அறத்தை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை.


திரைப்படத்தின் மிக கவித்துவமான இடமே இந்த மேலே, கீழே நடக்கும் விஷயங்கள் தான். ஏழைக்குடும்பம் தரைக்கு கீழ் தளத்தில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறது. அதிலிருந்து மேலே வந்துவிட வேண்டும் என்ற வேட்கையில் தான், பணக்கார வீட்டில் பொய் சொல்லி வேலைக்கு சேர்கிறார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் மறுபடியும் தரைக்கு கீழேயே தள்ளப்படுகிறார்கள். மேலே இருக்கும் மனிதர்களும் , கீழே இருக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கீழ் இருப்பவர்கள் மேலேயும், மேல் இருப்பவர்கள் கீழேயும் ஒரு போதும் மாறுவது இல்லை. Intermingling of classes மட்டுமே இந்த நவீன தீண்டாமைக்கு ஒரு சமூகமான முடிவைத் தர முடியும்.


நகைச்சுவையாக படம் ஆரம்பித்தாலும். படம் கண்டிப்பாக ஒரு பாடத்துடன் தான் முடிகிறது. நம்முடைய வாழ்க்கையும், வசதிகளும் இரவல் வாங்கப்பட்டது தான். இதை நிரந்தரம் என நினைத்து, நமக்கு கீழ் இருப்பவர்களை பற்றி சிந்திக்காமல் இருந்தால், நாளை நமக்கும் வாழ்க்கை தலைகீழ் ஆகலாம்.

Comments


bottom of page