top of page

Hashtag அரசியல் - BLACK LIVES MATTER

இது பழுதடைந்த system அல்ல. பழுதடைவதற்கு அது முன்னர் சரியாக இருந்திருக்க வேண்டுமே? இது சிலரை ஒடுக்குவதற்காகவே கட்டமைக்கப்பட்டது. ஒடுக்கப்படுவது நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றே கட்டமைக்கப்பட்டது. ஒரு சிலரை கீழே, ஒரு சிலரை மேலே என இந்த அமைப்பு தான் நிர்ணயிக்கிறது. அரசியல் ஆதாயத்திற்கும், அதிகாரத்தையும் சிலருக்கு வாரி வழங்கும் இது நம் வரிப்பணத்தாலும், வாக்குகளாலும் உருவாக்கப்பட்டாலும் அது நமக்கு பயனளிப்பது இல்லை. நம் அறியாமை தான் இதற்கு இரை. நாம் இனிமேலும் அறியாமையில் இருக்க முடியாது.


- Ava Duvernay, Filmmaker


அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக இருக்கும் சட்டங்களையும், காவல் மற்றும் நீதித்துறையையும் குறித்து சொன்னது இது தான்.




It’s not a broken system. It was built to be this way. It was built to oppress. It was built to control. It was built to shape our culture in a specific way. To keep some people here (down) and some people here (up). It was built for political gain and power and it is incumbent upon us. It lives off our taxpayer money, our votes. It lives off our ignorance and we can no longer be ignorant.

(original words in English from the interview with Oprah Winfrey)


Ava Duvernay –யின் இந்த வார்த்தைகள் அவரது படைப்புகளான when they see us மற்றும் 13th இரண்டிற்கும் பொருந்தும். இதில் முன்னது உண்மை சம்பவங்கள் அடிப்படையிலான தொடர். பின்னது இனவெறி எப்படி அரசாங்க சட்டங்களின் துணையுடன் வளர்கிறது என்பதை விவரிக்கும் documentary. செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் கருப்பின சிறுவர்கள் சிறையிலும், சிறையிலிருந்து வெளி வந்த பின்னரும் அனுபவிக்கும் விஷயங்கள் தான் மொத்த கதையும். சிறைக்குள் செல்பவர் குற்றவாளியா, நிரபராதியா என்று சிறை பார்ப்பது இல்லை. வெளிவரும் இருவருமே சிதைந்து தான் வருகிறார்கள். ஒரு முறை சிறையில் இருந்தவர்கள், மீண்டும் ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்டு மீண்டும் சிறையை தேடுவதற்கு காரணம். வெளி உலகம் அவர்களை அதைவிட அதிகமாக புறக்கணிக்கிறது.


இது ஒரு நிகழ்வு என்றால் இதைப் போன்ற ஆயிரம் நிகழ்வுகள் அமெரிக்கா எங்கும் நடக்கிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த காலத்திலிருந்து, அடிமைகளாக ஒடுக்கப்பட்ட கருப்பினத்தவரை அரசும் சட்டமும் எப்படி விதவிதமாக வதைக்கிறது. கல்லூரி படிக்கும் போது birth of a nation படத்தின் சில காட்சிகளை திரையிட்டது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அதன் காட்சிகள் இவ்வளவு நிறவெறி ஊறி இருந்தது நினைவே இல்லை. அல்லது அப்படி அதை அணுக வேண்டும் என சொல்லித்தரப்படவில்லை.




அது உலக சினிமாவில் தொழில்நுட்பம் மற்றும் காட்சியமைப்புகளுக்காக ஒரு மைல்கல்லாக கருத்தப்படும் படம். ஆனால் அதில் காட்டப்படும் கருப்பின ஆண் பாத்திரங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாகரிகமற்ற, மிருகம் போன்று நடந்தக்கொள்ளும் கருப்பின ஆணின் சித்திரத்தை இன்று வரை மக்களின் மனதிலிருந்து அழிக்கவே முடியவில்லை. இன்று வரை அவர்களை விரட்டும் stereotype அது. ஒரு கருப்பினத்தவரை பார்த்தாலே துப்பாக்கியை நீட்ட வைக்கும், கால்களை வைத்து கழுத்தை நெறிக்கவைக்கும் இனவெறிக்கும், பயத்திற்குமான மூலம் அது தான்.




பொறுப்பேற்கும் ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தன் பங்கிற்கு கருப்பினத்தவரை ஏழ்மையில் தள்ளவும், குற்றவாளிகளாக சித்தரிக்க இயற்றிய சட்டங்களும், அதற்கு பின்னால் இருக்கும் பெரும் முதலாளிகளும் என அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவராக வாழ்வது எவ்வளவு சிரமமான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது இதைப் பார்க்கும் போது தான் தெளிவாக புரியும். இன்று segregation இல்லை, slavery இல்லை ஆனாலும் மக்கள் மனதில் ஒரு வெறுப்பு இருக்கிறது. அதைக் களைய வேண்டும். Black lives matter போராட்டங்களின் அடிப்படை இது தான். George Floyd சம்பவத்தை தாண்டி எவ்வளவோ இருக்கிறது. ட்விட்டர் hashtag இல் இடம்பெறாதவைக்கும் நம் கவனம் கொடுக்கலாம்.




இப்போது மீண்டும் Ava சொன்ன வார்த்தைகள். இது உடைந்து போன ஒரு அமைப்பு இல்லை. இது சில மக்களை ஒடுக்குவதற்காக, அடக்கியாள்வதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு.


It’s a good system with just a few bad apples என்று எல்லாவற்றிற்கும் சப்பைக்கட்டுவார்கள். அது நல்ல system ஆக இருந்தால், அந்த bad apples ஐ அனுமதித்திருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றிருக்க வேண்டும். இத்தனை அநீதிகள் நடக்க, அந்த அமைப்பு கேள்வி கேட்பதில்லை என்பதை விட, அந்த அநீதிகள் நிகழவே system தான் காரணம். உண்மையில் it’s a bad system with just very few good apples. அந்த நல்லவர்களும் ஒன்று நசுக்கப்பட்டு வெளியேறுவார்கள் இல்லை வேறு வழியில்லாமல் convert செய்யப்படுவார்கள்.

When they see us பார்த்துவிட்டு, 13th பார்க்கும் போது அந்த வலியும், அதற்கான காரணங்களும் தெளிவாக புரியும். Oprah Winfrey உடன் Ava Duvernay மற்றும் when they see us குழுவினர் கலந்துக்கொண்ட உரையாடல் ஒன்றும் Netflix-இல் இருக்கிறது. அதில் தான் central park five என்று அழைக்கப்பட்டு தற்போது exonerated five என்று அழைக்கப்படும் இவர்களின் உண்மையான முகங்களையும் பார்த்தேன். இத்தனை துன்பங்களுக்கு பின்னும், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்டவர்களின் குரலாக வாழ்கிறார்கள்.




2014 சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட Selma படமும் அவரது இயக்கம் தான். Martin Luther King, Malcolm X என்று இருவரையும் ஒரே வரியில் படித்து படித்து, இருவரும் ஏதோ ஒன்றாக இணைந்து போராடியதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது உண்மை இல்லை. அவர்கள் இலக்கு ஒன்றாக இருந்தாலும், எதிர் எதிர் துருவங்கள்.






ஒரு போராட்டத்தின் அடையாளமாக ஒருவர் வரலாற்றில் இடம் பெற்றாலும், அதற்கு பின்னால் எத்தனையோ பேரின் தியாகங்கள் இருக்கின்றன. ஒரு தலைவனாக ஏற்படும் நெருடல்கள், செய்ய வேண்டிய சமரசங்கள், கொள்கை பிடிப்பை எந்த சூழலிலும் விட்டுவிடாமல் இருப்பது என Martin Luther King பற்றி அதிகம் தெரிந்துக் கொள்ள தூண்டுகிறது இந்தப்படம். I have a dream உரையை தாண்டி தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கிறது.



என் மக்களின் வலிகளை என்னைவிட யார் சிறப்பாக சொல்லிவிட முடியும். எங்களது கதைகளை சுரண்டி நீங்கள் சொல்லி கிழிச்சது போதும், நாங்களே சொல்கிறோம் என்ற திமிர் Ava –வின் ஒவ்வொருப் படைப்பிலும் தெரிகிறது. இத்தனைக்கும் முறையாக திரைப்படக் கல்லூரி சென்று பயின்றவர் இல்லை. திரைத்துறையில் publicist ஆக பணியாற்றியவர். அவரது படங்களில் பணிபுரிய பெண்களுக்கு முன்னுரிமை என்பது கூடுதல் சிறப்பு.




ஒரு படைப்பு நமக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி, தேடலை உண்டுசெய்வது தான். படத்தின் மூலம் தெரிந்துக் கொள்வது ஒரு துளி தான். அது நம்மை தேடி தேடி பார்க்கவும், படிக்கவும் வைக்கும். நாமாக தேடித் தெரிந்துக்கொள்ளும் போது தான் உண்மையான புரிதல் ஏற்படும்.





பார்த்தோம் முடித்தோம் என்று இல்லாமல், அதை இன்னும் ஆழமாக தெரிந்துக் கொள்ள google-ஐ நோக்கி ஒட வைக்கும் எல்லா படங்களும், அதன் படைப்பாளிகளும் எப்போதும் ஒரு படி மேல் தான். அந்த வரிசையில் When they see us, 13th, Selma மற்றும் Ava Duvernay.

Comments


bottom of page