top of page

மனிதம் மனிதர்களுக்கு மட்டுமா?

ஒரு நகரம் நவீனமயமாகும் போது எத்தனை உயிரினங்கள் சுரண்டப்படுகின்றன என்ற கவலை நமக்கு பெரும்பாலும் இருப்பது இல்லை. அந்த காலம் மாதிரி காட்டுக்குள்ள வாழ முடியுமா என்றால் முடியாது தான். ஆனால் மனிதன்- விலங்கு இடையே நடக்கும் மோதல்களில் நாம் எப்போதும் இயற்கையின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது இந்த நிகழ்வு. ஏனென்றால் வேறு எந்த உயிரினமும் தேவையைத் தாண்டி அதிகமாக உண்ணாது, பொருள் சேர்க்காது, வளங்களை அழிக்காது.


ஊருக்குள் வரும் யானைக்கு பழத்தில் வெடியை யாரும் வேண்டும் என்று வைப்பது இல்லை. ஆனால் ஒரு யானையின் இறப்பை நாம் அவ்வளவு சுலபமாக கடந்து போய்விடவும் கூடாது. ஏனென்றால் அளவில் மட்டுமல்ல, ஆற்றலிலும் யானை உயர்ந்து தான் நிற்கிறது.



வடிவமைப்பு - Yuvaraj



யானை காட்டின் அங்கம். யானைகள் தான் காட்டின் வளத்தை தீர்மானிக்கின்றன. யானையின் சானத்தில் இருந்து உருவாகும் மரங்களும் தாவரங்களும் தான் காட்டை உயிர்ப்பாக வைத்திருக்கிறது. அது காட்டிலிருந்து பெரும் உணவை விட, பல மடங்கு மரங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. யானைக்குமே இது முதல்முறையாகத் தான் இருந்திருக்கும். காட்டுத்தீ, நோய்கள், துப்பாக்கி குண்டுகளுக்கெல்லாம் பயந்த யானைக்கு அன்னாசிப்பழத்தை பார்த்து பயப்பட தெரியவில்லை.


சமீபத்தில் பார்த்த Eeb Allay Ooo என்ற திரைப்படத்தின் தாக்கமே இன்னும் அகலவில்லை. அதற்குள் இப்படி ஒரு நிகழ்வு. டெல்லியின் குரங்குகளும் அவற்றை விரட்டும் மனிதர்களைப் பற்றிய கதை. ஏன் இந்த இரண்டையும் தொடர்பு படுத்தி எழுதுகிறேன் என கடைசியில் தெரியும்.






குரங்குகளை நடிக்க வைக்க முடியாது. இயல்பாக எடுத்து reaction shots மூலம் தான் அர்த்தம் உள்ளதாக ஆக்கிகொள்ள வேண்டும். ஆனால் பல இடங்களில் குரங்குகளுக்கு scene paper கொடுத்தது போலவே நடந்துக்கொள்கின்றன. முகபாவங்களில் அப்படியே மனிதர்களை போலவே தோற்றமளிக்கின்றன. மன்னிக்கவும் நாம் தான் குரங்குகள் போல இருக்கிறோம். அவர்கள் மூத்தவர்கள் இல்லையா?


கதையின் கருத்தாக நான் புரிந்துக் கொண்டது இது தான். அடர்வனங்களை அழித்து நகரங்கள் அமைக்கிறோம். விலங்குகள் வாழ்விடத்தை தொலைத்து, உணவுத் தேடி நகருக்குள் வருகின்றன. அந்த குரங்குகளையே விரட்ட வேலைக்கு ஆட்கள் எடுக்கிறோம். குரங்குகளை விரட்டத் தவறினால் அவர்களையும் விரட்டுவோம். இந்த சுழற்சியில் வனத்தை இழந்த குரங்குக்கும், வேலையிழந்த மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லை. அனைவரும் சுரண்டப்படுபவர்கள் தான்.


பிழைப்புத் தேடி நகரத்துக்கு கூலிகளாக வரும் எல்லாருமே ஒரு விதத்தில் குரங்குகள் போலத்தான். இன்று கிடைக்கும் எதுவும் நாளை நிரந்தரம் இல்லை. இப்படி முகம் தெரியாத எத்தனையோ ஒப்பந்த தொழிலாளிகளின் மரணத்தை நகரம் தினம் சந்திக்கிறது. எந்த சுவடும் இல்லாமல் இறந்தவருக்கு பதிலாக இன்னொரு முகம் மாற்றப்படும். ஆனால் குரங்குகளின் இடத்தை எடுத்துகொண்டு அவைகளை துரத்தும் போதோ, வேலையில் இருப்பவர்களை பிழிந்து வேலை வாங்கிவிட்டு, நிற்கதியாக்கும் போதோ குற்ற உணர்ச்சி எழாமல் இருப்பதே இங்கே நமக்கு சொல்லிக்கொடுக்கப்படும் கலாச்சாரம். Survival of the fittest கலாச்சாரம்.


மற்ற எல்லா நேரங்களிலும் மனிதன்-விலங்கு மோதலில் நாம் எந்தப் பக்கம் என தெளிவாக தெரியும். இந்த குரங்குகளுக்கும், விரட்டுபவர்களுக்குமான மோதலில் குரங்குகளை பார்த்தாலும் பாவமாக இருக்கிறது, அதனை விரட்டியாவது பிழைத்துவிடலாம் என நினைக்கும் மனிதனை பார்த்தாலும் கஷ்டமாக இருக்கிறது. கிட்டத்தட்ட இருவருமே ஒரே அணி தான். அவர்கள் ஆதிக்குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்திருந்தாலும் சுரண்டிப் பிழைக்கத்தெரியாத குரங்குகள் தான். குரங்குகள், யானைகளின் பக்கம் நிற்பது போல நாம் இந்த மனிதர்கள் பக்கமும் நிற்க வேண்டும்.





மனிதர்கள் உண்மையில் புதிர்கள் தான். விலங்குகள் கொல்லப்படும் போது வரும் அறச்சீற்றம் பலநேரம் மனிதர்கள் இப்படி நசுக்கப்படும் போது வருவதில்லை. அதுவும் ஊடக வெளிச்சம் படாத, hashtag போட்டியில் தோற்றவர்களுக்கு நம்மிடம் கொடுக்க ஒரு சொட்டு இரக்கம் இல்லை. ஊடகங்கள் காட்டும் நபர்கள், விலங்குகள் மட்டும் தான் உலகில் துன்புறுகிறார்கள் என நினைக்காமல் அதைத் தாண்டியும் பார்க்க பழகுவோம். அது மட்டுமே உண்மையான சமூக அக்கறை!

Comments


bottom of page