Please bear with me
I am just thinking out loud.
எனக்கும் மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது என நாம் எல்லாருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தோன்றியிருக்கும். அது இயல்பு தான். குறிவைத்து நமக்கு மட்டும் வரிசையாக துன்பங்கள் வழங்கப்படுவதாக தோன்றும். அப்படி நடக்கும் அளவிற்கு நாம் என்ன முக்கியமான நபரா? மிகப்பெரும் பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு துகள் தான். ஆனால் நமது படிப்பும், சமூக அந்தஸ்தும், ஏதோ உலகம் நம்மை சுற்றித் தான் சுழல்கிறது என்ற எண்ணத்தை கொடுக்கலாம்.
நம்மை சுற்றி இருக்கும் நால்வர் தான் உலகம், நமக்கு தெரிந்த நியாயங்கள் மட்டுமே நியாயங்கள் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் David Foster Wallace – இன் THIS IS WATER உரையை (https://fs.blog/2012/04/david-foster-wallace-this-is-water/) கேட்கலாம்/ படிக்கலாம். அந்த உரையை எனக்கு அறிமுகப் படுத்தியது அதை தழுவி எடுக்கப்பட்ட குரங்கன் பாடல் தான் (https://www.youtube.com/watch?v=6fu5znw_9g4) பாட்டை முதல் முறை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கும், என்ன டா இது தண்ணி இது தான் என்பதெல்லாம் ஒரு வரியா என்று தான் தோன்றும்.
ஆனால் அந்த உரையை படித்துவிட்டு பாடலை கேட்கும் போது, பாடலின் அர்த்தமே மாறியிருக்கும். தண்ணி என்பதை அன்றாட வாழ்க்கை என்ற பொருளில் எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாட வாழ்க்கையின் சராசரித்தனங்கள், போதாமைகள் இன்னல்களின் ஊடே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவைப்பது தான் உண்மையான கல்வி!
குட்டி இளவரசன் (The Little Prince) கதையை படிக்காதவர்கள் நிச்சயமாக படியுங்கள். படித்தவுடன் புரியவில்லையே என்று நினைக்க வேண்டாம். அந்தப் புத்தகம் குறித்து சில வீடியோக்களும் பார்த்துவிட்டு இன்னொருமுறை வாசியுங்கள். ரொம்ப சின்ன புத்தகம் தான், பயப்பட வேண்டாம்.
முழுக்க முழுக்க குட்டி இளவரசனையும், டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் உரையையும் ஒப்பீடு செய்ய முடியாது. அவை ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை படிக்கும் போது இன்னொன்று தோன்றியதால், இரண்டையும் இணைத்து எழுதுகிறேன். இரண்டில் ஏதேனும் ஒன்றை இது படிக்கத் தூண்டினால் கூட மகிழ்ச்சி தான்!
TLP
மனிதர்கள் சுலபமாக எண்ணிக்கைக்கு மயங்குபவர்களாகவே இருக்கிறார்கள். அது பணமோ, பட்டமோ, வயதோ, உடைமையோ! அவர்களுக்கு தரத்தை விட எண்ணிக்கை பிடித்திருக்கிறது. நட்சத்திரமாக இருந்தாலும் சரி, கண் காணாத தேசங்களாக இருந்தாலும் சரி. ஒன்றை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு பின்னால், ஆசை, தேவை என்பதை விட பெருமை இருக்கிறது!
DFW
இதையே தான் டேவிட்டும் சொல்கிறார். ஒரு வயதிற்கு பின் கடவுள் மறுப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார். எல்லாரும் ஏதோ ஒன்றை வழிபட தான் செய்கிறார்கள். சிலருக்கு அது கடவுள், சிலருக்கு அறிவு, பணம் அல்லது புகழ். இப்படி ஏதோ ஒரு மயக்கம் எல்லாருக்கும் உண்டு!
DFW
இப்படித் தான் சிந்திக்க வேண்டும் என சொல்லிக்கொடுப்பது கல்வியல்ல், நமது default சிந்தனை முறையிலிருந்து நம்மை வெளி கொண்டுவருவது தான் கல்வி! உலகம் எத்தனை பெரிது, நாம் எத்தனை சிரிது என்ற எண்ணமே நமது சிந்தனையை விரிவு செய்யும் முதல் வழி!
TLP
ஒரு பூவோ, செடியோ, மனிதனோ கூட, அதிகபபட்சம், தன்னை சுற்றி ஒரு சிறிய வட்டத்துக்குள் நடக்கும் விஷயங்களை மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். ஒரே ஒரு இடத்தில் இருக்கும் செடி, தான் பார்க்கும் மனிதர்கள் தான் மனிதர்கள் என நினைத்து உலகிலேயே 5 மனிதர்கள் தான் இருக்கிறார்கள் என சொல்வது அபத்தம். மனிதனும் அப்படித் தான். கண்ணுக்கு எட்டிய வரை உலகம், வாட்ஸாப்பில் வரும் வரை செய்தி என வாழ்கிறான். அதைத் தாண்டிய தேடலும் இல்லை, தெரியாததை ஒப்புக்கொள்ளும் மனதும் இல்லை.
DFW
முக்கால்வாசி நேரம் நமக்கு கண் முன்னே இருக்கும் விஷயங்களை பார்க்காமல், நம் தலைக்குள் நடக்கும் அறிவு யுத்தத்தில் இருக்கிறோம். அறிவிஜீவிகளுக்கு எல்லாம் இருக்கும் பிரச்சனை தான் இது. கள யதார்த்தங்கள் அவர்களுக்கு உரைக்கவே உரைக்காது. அவை அப்பட்டமாக கண் முன் இருந்தாலும் சரி! ஏனென்றால் கண்ணை மறைப்பது அறிவு( இதுவரை பெற்றது). அந்த அறிவைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, நாம் புரிந்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை!
TLP
எல்லாவற்றையும் அறிவின் வழி மட்டுமே சிந்திப்பதன் விளைவு தான் இது. நமது அறிவு என்பது சிறுதுளி தான். மனதின் வழி பார்த்தால் மட்டும் எது முக்கியம் என்று தெரியும்! கண் புறத்தோற்றத்தை மட்டுமே பார்க்கும். ஆனால் முக்கியமான விஷயங்கள் எல்லாமே நம் கண்ணால் பார்க்க முடியாதது தான்!
வளர வளர நமது அறிவு சுருங்கத்தான் செய்கிறது. எதையும் அந்த குழந்தையின் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ளும் இயல்பு குறையும். கற்றுக்கொள்ளும் முன்பே நம்மை அறிவாளியாக முன்னிறுத்த வேண்டிய அவசியம் குழந்தைக்கு இருப்பது இல்லை. அது ஒரு பாம்பின் வயிற்றுக்குள் இருக்கும் யானையை சுலபமாக வரைந்து காட்டுகிறது. அதில் நமக்கு தான் பாம்பும் தெரிவதில்லை, யானையும் தெரிவதில்லை. குறைகள் மட்டுமே தெரிகின்றன.
ஒரு வாசிப்புக்கு தான் இங்கு பல புத்தகங்கள் உள்ளன. மறுவாசிப்புக்கான புத்தகங்கள் வெகு சில. அப்படி ஒரு புத்தகம் தான் குட்டி இளவரசன். ஒரு பாலைவனத்திற்கு நடுவில் ஒரு சிறுவனுக்கும், ஒரு விமானிக்கும் நடக்கும் உரையாடல் தான் இந்தப் புத்தகம் என google உங்களுக்கு சொல்லும். ஆனால் இந்த புத்தகம் உண்மையில், நீங்கள் அனுமதிக்கும் அளவு பெரிதாக விரியும். டேவிட் ஃபாஸ்டர் வாலஸின் உரையோ, இந்த குட்டி இளவரசன் புத்தகமோ, தேடலுக்கானவை, மேலோட்டமாக வாசித்தால் ஒரு நல்ல கதை அல்லது அர்த்தமற்ற உரை. ஆனால் வாழ்க்கைக்கு பொருத்தி பார்த்தால், ஆயிரம் அர்த்தங்கள்!
Comments