top of page

CTRL + F5

லார்க் என்றப் பறவை அதிகாலையிலேயே தன் நாளைத் தொடங்கி விடுமாம். அதே போல மாலையிலும் சீக்கிரம் கூடடைந்து விடும். சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழிக்கும் பழக்கம் உடையவர்களை லார்க் பறவையுடன் ஒப்பிடுவது உண்டு. இணையத்தின் கண்டுபிடிப்பு பல நன்மைகளை செய்தாலும், நம் எல்லோரது தூக்கத்தையும் கண்டிப்பாக பறித்துக் கொண்டது. சராசரியாக இரவுத் தூங்கும் நேரமே ஒரு இரண்டு – மூன்று மணிநேரம் பின்னால் சென்றால் விட்டது.

9 மணிக்கு ராதிகா நடிக்கும் சீரியலை பார்க்கும் போதே தூக்கம் சொக்கி, சோஃபாவிலேயே உறங்கிப்போன காலம் போய், இன்று 9 மணிக்கு தொடங்கும் 3 மணி நேரப் படத்தை பார்த்த பின்பும் தூக்கம் வராமல், அடுத்து என்ன பார்க்கலாம் என்று கண் துறு துறுவென இருக்கிறது. 12 மணிக்கு உறங்குவதே ஒரு பெரிய சாதனை ஆகிவிட்டது. பனிக்காலத்தில் சூரியன் வெளி வராத நாடுகளில், பகலின் ஒளியை வீட்டுக்குள்ளேயே உருவாக்க SAD விளக்குகள் பயன்படுத்துகின்றனராம். அதன் மூலம் பனிக்காலத்தில், இரவு பகல் என்ற வேறுப்பாட்டை உடலுக்கும், மூளைக்கும் புரிய வைத்து, உறக்கத்தை தூண்டுகின்றனர். தூக்கம் வருவதற்காக மெலடோனின் ஹார்மோனை தூண்டுகின்ற உணவுகள், மாத்திரைகள் சாப்பிட்டு, அலையோசை, காட்டின் ஒளிகளை ஒளிபரப்பும் கருவிகளையெல்லாம் கூட வாங்கி வைத்து வற்புறுத்தியாவது தூக்கத்தை வரவழைக்கின்றனர். இதை எந்த ஒரு இடையூறும் இல்லாமல், எந்தக் கருவியும், மாத்திரையும் இல்லாமல் ஒரு 10 ஆண்டுகள் முன் வரை நம்மளாலும் செய்ய முடிந்தது.

கிராமங்களில் 4-5 மணிக்கே இரவு உணவு தயார் செய்ய தொடங்கி விடுவார்கள். ஏனென்றால் வயல் வேலைக்கு செல்பவர்கள் சீக்கிரம் வந்து சாப்பிட்டு, உறங்கினால் தான் அடுத்த நாள் விடியலில் எழுந்திரிக்க முடியும். ஆனால் இப்போது அவர்களும் கூட கையில் செல்போன்களை வைத்துக்கொண்டு விரல் தேயத் தேய, நியூஸ் ஃபீடை தள்ளிக்கொண்டு இருக்கின்றனர்.

உண்மையான அதிகாலையை கடைசியாக பள்ளியில் தேர்வுக்காக படிக்கும் போது தான் உணர்ந்திருக்கிறேன்.படிக்குற நேரமெல்லாம் கோட்டை விட்டு, அதிகாலை 2 மணிக்கெல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். எல்லாரும் தூங்கிய, வீடு நிசப்தமான அந்த நேரத்தில் ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டு, எழுதி கொண்டு, பார்த்துக்கொண்டு இருப்பதில் ஒரு இனிமை நிச்சயம் இருக்கிறது.

ஆனால் நம் உடல் அந்த நேரத்திற்கு பழக்கப்பட்டது அல்ல. அது காலையில் எந்திரிச்சு, வேலைகளை முடித்து மாலையில் கூடடையும் லார்க் பறவையாகவே இருக்க விரும்புகிறது. நாம் தான் நமது வேலையையும் பொழுதுபோக்கையும் திணிக்க அதை ஒரு ஆந்தையாக மாற்ற முயற்சிக்கிறோம். ஆனால் ஆந்தைக் கூட பகல் வேளை முழுக்க உறங்கிவிடும். உண்மையில், நமக்கு லார்க்கின் வாழ்க்கை, வேலை பார்க்க தேவைப்படுகிறது, ஆந்தையின் வாழ்வு பொழுதுபோக்குக்கு தேவைப் படுகிறது. இடையில் நம் உடல் மட்டும் மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி வாங்குகிறது.

என்னைக் கேட்டால் உறக்கம் தான் எல்லாவற்றிற்குமான மருந்து என்பேன். ஒரு முடிவு எடுக்க ரொம்ப குழப்பமாக இருக்கும் போது எப்போதுமே செய்வது, “sleep on it”. உறங்கி எந்திரிக்கும் போது கண்டிப்பாக ஒரு தெளிவு இருக்கும். ஏதாவது ஒரு கேள்வியோடு தூங்கினால் கனவிலேயே கூட பதில்கள் வரும். அதே போல யாரோடாவது, எதன் மேலாவது கோபமாக இருந்தால் கூட இதையே செய்யலாம். தூங்கி விழிக்கும் போது, நேற்றைய இரவின் பிரச்சனைகளும், அதிருப்திகளும் அத்தனை அற்பமாக தோன்றும். A good night’s sleep always helps put things in perspective for you!

உறக்கம் உண்மையில் நம் மூளைக்கு ஒரு ரிஃப்ரெஷ் பட்டன் தான். ஒரு நாள் முழுவதும் நீங்கள் ஏற்றிக்கொண்ட எல்லா சுமைகளையும், 8 மணி நேரத்தில் சரி செய்யக்கூடிய இயற்கையின் ரிஃப்ரெஷ் பட்டன. ctrl +f5 !

Comments


bottom of page