எஸ். இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் – 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்
புத்தகம் வாசிப்பதால் என்ன பெற முடியும் என்ற கேள்விக்கு பதில் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும்போதும் அது வேறாக இருக்கிறது. ஆனால் அத்தனை பதில்களும், ஏன் புத்தகம் படிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. புனைவோ, கதையோ படிக்கும் போது, அது வெறும் ஒரு நாவலின் விறுவிறுப்பான ஓட்டத்திற்காக மட்டுமே படிக்கப்படுவதில்லை. ஏதோ ஒரு take away கண்டிப்பாக இருக்கும். எஸ். இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலை படித்து முடிக்கும் போது, இது வரை நான் பார்த்த எல்லா கோயில், திருமண நிகழ்வுகளும் கண் முன் தோன்றி மறைந்தன. யாராவது நாம் பேசும் போது அவர்களை கவனிக்காமல் இருந்தால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். பல வருஷங்களாக கற்ற கலையை, ஒருத்தர் மேடையில் அரங்கேற்றும் போது அதை கூட்டத்தில் சிலர் கவனிக்கவில்லையென்றால் பரவாயில்லை. ஒருவர் கூட கவனிப்பதில்லை என்பது தான் வருத்தம்.
பல திருமண நிகழ்வுகளில், யாருக்காக நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது என்றே தெரியாத அளவில் தான் மக்கள் இருக்கின்றனர். இது அவர்களை சொல்லி குற்றமில்லை. நமக்கு யாரும் நாதஸ்வரம், தவில் வாசிக்கும் போது அதற்கு மரியாதை செலுத்தி கவனி என்று சொல்லவில்லை. கோயில்களில் ஸ்விட்சைத் தட்டினால், இடி போல முழங்கும் தானியங்கி கொட்டும், ஒலி பெருக்கியும் வந்த போது, அதை தடுத்திட யாரும் சொல்லி கொடுக்கவில்லை. யாருடையை வாழ்வாதாரம் எப்படி போனால் என்ன, தாலியைக் கட்ட ஒரு இசை, சப்பரத்தில் சாமி வரும் போது ஒரு இசை கிடைத்தால் போதும் என நினைப்பது தான் இதற்கு காரணம். சீனப் பிரதமரின் வருகைக்காக ஒரு நட்சத்திர விடுதியின் வாசலில், நாதஸ்வர, தவில் கலைஞர்கள் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்த காட்சி தான் ஞாபகம் வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையை மேடையேற்றாமல், தெருவில் இறக்கியது நிச்சயம் அவமரியாதை தான்.
தமிழ் திருமணங்களில் டிஜேவும், செண்டை மேளமும் நுழைந்தது சாதாரண விஷயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அது நம் பாரம்பரிய இசைக்கு நாமே இசைக்கும் கடைசி மணி என்பதை உணர வேண்டும். மீண்டும் முதல் கேள்விக்கு வருகிறேன். சஞ்சாரத்தில் பெற்றவை என்ன? எங்காவது நாதஸ்வர இசையைக் கேட்டால், ஒரு கணம் நின்று கவனிக்க வைத்திருக்கிறது சஞ்சாரம். மேலும் திருமணம், கோயில் நிகழ்வுகளுக்கு நாதஸ்வர கலைஞர்களை அழைத்தால், முடிந்த வரை பேரம் பேசாமல், நியாயமான தொகையை கொடுக்க எல்லாரும் முன் வர வேண்டும்.
இறுதியாக, தமிழர் திருமணங்கள், தமிழ் திருமணங்களாக இருப்பதில் தான் நம் பாரம்பரிய இசையின் ஆயுள் இருக்கிறது என்பதை தமிழ் சமூகம் நிச்சயம் உணர வேண்டும்.
Comments