top of page

100 நாள் கூத்து

சரியாக 100 நாட்களுக்கு முன்னர் தான, தினமும் குறைந்தது 2 கி.மீ ஒடுவேன் என்ற சபதத்தை எடுத்திருந்தேன். ஆரம்பித்த போது இருந்த உற்சாகமும், ஆர்வமும், ஒடுவதால் கிடைக்கும் எண்டார்ஃபின் போதையும் சந்தோஷமாக இருந்தது. அதற்கான செயலிகளை டவுன்லோட் செய்து, ப்ளூடூத் இயர்போன்ஸ் வாங்கி, தினமும் எவ்வளவு தூரம் ஒட முடிகிறது என கணக்கு செய்வது முதல், ஒரு கிலோமீட்டர் ஒடுவதற்கான நேரத்தை கணக்கிடுவது வரை , ஓடுவது என்பதே ஒரு ஜாலியான அனுபவம் தான். மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி!

ஒடுவது ஒரு சிறந்த கூச்சம் களையும் யுக்தியும் கூட. ஆரம்பத்தில் ஒடுவது அத்தனை எளிதாக இருக்காது. சுற்றிலும் நடப்பவர்கள் மத்தியில் ஓடுவது அதை விட கடினம். ஆனால் இரண்டு மூன்று நாள் வேக நடைக்கு பின், ஒடுவதற்கான உடற்திறன் தானாக அதிகரித்திருக்கும்.

அப்போது நடப்பது தான் சிரமமாக இருக்கும். வேகமாக நடக்கும் போது வரும் கணுக்கால் வலி இதைத் தான் உங்களுக்கு சொல்கிறது. உனக்கு வேகமாக செல்ல வேண்டுமானால் ஒட ஆரம்பி, இனியும் நடந்தால் வலி தான் மிச்சம் என உடல் சொல்லும். அப்போது ஒட ஆரம்பிக்க வேண்டும். மூச்சுவாங்கி நிற்கவில்லை என்றால், கால்கள் பின்னி கீழே விழுந்துவிடுவேனோ என்ற எண்ணம் மேலோங்கும் வரை ஒடலாம்.

அதற்கு பின் நின்று நடந்து மீண்டும் சுவாசம் கட்டுக்குள் வந்ததும் ஓடுங்கள். ஒரு ஒட்டத்திற்கும், அடுத்த ஒட்டத்திற்குமான இடைவெளி முதல் நாள் அதிகமாக இருக்கலாம். ஒரே ஒட்டத்தோடு பயிற்சியை முடிக்க வேண்டியதாக கூட இருக்கலாம். ஆனால் அடுத்த நாள் இடைவெளி குறையும், உடல் சக்தியை சீக்கிரமாக மீட்க முடியும். அப்போது அதிகம் ஒடலாம். இதற்கு பின்னும் சில நாள் நன்றாக ஒட முடியும், சில நாள் தசைப் பிடிக்கும், சில நாள் நடக்கத்தான் முடியும். முன்னேறி சென்றுக் கொண்டே இருக்கும் வரை எல்லாரும் ரன்னர் தான்! வின்னர் தான்! துவண்டு விடக் கூடாது.

100 நாட்களில் நான் 50-60 நாட்கள் தான் ஓடியிருப்பேன். இடையில் கால் பிசகி நடக்க முடியாமல் போனதால், ஒரு பெரிய தொய்வு ஏற்பட்டது. அதற்கு பின்னும் மழை, காலையில் இருக்கும் குளிர், காய்ச்சல் என ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடை வந்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் 100 நாட்களை ஆரம்பிக்கும் முன்னரே தெரியும் இதை கைவிடும் சூழ்நிலையும் வரலாம் என்று. பெயருக்கு பள்ளியில் ஒரு ரன்னிங்க் ரேஸ் கூட ஓடாத ஆளை, ஒரு 50 நாட்கள் ஒடவைத்ததே இந்த சவால், அது வரையில் சந்தோஷம் தான்.

திடீரென்று டயட், உடற்பயிற்சி செய்பவர்களை நீங்களே கூட உங்கள் அலுவலகத்தில் கேலி செய்திருப்பீர்கள். இதெல்லாம் ஒரு நாள் கூத்துனு. ஒரு நாள் கூத்தாக இருந்தாலும், இண்ஸ்டாகிராமிற்காக செய்தாலும், ஆரோக்கியத்தை நோக்கி நம்மை உந்தி தள்ளுவது எப்போதுமே குற்ற உணர்ச்சி தான். வாரம் முழுக்க நொறுக்கி தீனிகளை தின்றவர்கள், டயட் என்ற பெயரில் இரண்டு நாளாவது வயிற்றுக்கு விடுமுறை தருவார்கள். உடற்பயிற்சி என்ற பெயரில் வாரத்தில் 2-3 நாளாவது கை காலை அசைப்பார்கள்.

தொடர்ந்து தினமும் உணவு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சில நேரங்களில் வெளியே சாப்பிட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது அல்லது வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துடுகிறது என்று பலர் சலிப்படைவார்கள். கூடவே டயட்டீசியன், சமையல் செய்ய செஃப் வைத்திருந்தால் தான் நம்மால் அப்படி இருக்க முடியும். ஒரு டயட்டின் வெற்றி எப்போதும் 100 சகவிகிதத்தில் இருப்பது இல்லை, 75 சகவிகிதத்தில் இருக்கிறது.

உங்களால் 75 சகவிகிதம் உங்கள் திட்டத்தை சரியாக பின்பற்ற முடிந்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும். ஒரு வருடத்தில் இப்படி 4-5 சவால்களை ஏற்று, அவற்றை 75 சகிவிகிதம் நிறைவேற்றினாலே அந்த வருடத்திற்கான ஆரோக்கிய கோட்டாவை தொட்டுவிடலாம். ஆனால் இந்த மார்க் 75 இல் நின்றுவிடக் கூடாது, முன்னேற வேண்டும். ஆரோக்கியம் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும் அது 75 ஆகவும் இருக்கலாம்!

Yorumlar


bottom of page